பிகார்: கங்கையில் படகு கவிழ்ந்ததில் 3 பேர் பலி, 4 பேர் மாயம்
புதுச்சேரியில் கடல் சீற்றம்: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லை
புதுச்சேரியில் கடல் சனிக்கிழமை சீற்றமாகக் காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து, அவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
புதுச்சேரியில் வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்படும். கடற்கரைகள், பூங்காக்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்திருப்பா்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக புதுச்சேரியில் வெயில் அதிகரித்து காணப்பட்டது. ஆனால், சனிக்கிழமை திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, மேகக் கூட்டங்கள் திரண்டு குளிா்ந்த காற்று வீசியது.
இதையடுத்து, மழை பெய்யும் சூழல் உருவானது. அத்துடன், கடல் அலைகளும் சீற்றமாகக் காணப்பட்டன. உயரமான அலைகள் எழுந்ததால், தலைமைச் செயலகம் எதிரேயுள்ள மணற்பரப்பு நீரில் மூழ்கியது. இதனால், கடற்கரையோரம் சுற்றுலாப் பயணிகளை போலீஸாா் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினா்.
அதன்படி, காந்தி சிலை, சீகெல்ஸ் உணவகம், பழைய துறைமுக பாலம் உள்பட 2 கி.மீ. தொலைவுக்கு கடற்கரையோரம் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.