BB Tamil 8 Day 104: மண்டையைக் கழுவிய முத்து; ‘Toxic free season’ - சிறப்பாகக் குறிப்பிட்ட சுனிதா
‘பிக் பாஸ்-ன்றது நிகழ்ச்சி மட்டுமல்ல - எமோஷன். நீங்க வீட்டுக்குள்ள இருக்கும் போது உணர்வுகளின் எக்ஸிபிஷன். வெளில போய்ட்ட பிறகு உணர்வுகளின் மியூசியம்’ போட்டியாளர்களுக்கு விடை கொடுத்து அனுப்பும் நேரத்தில் பிக் பாஸ் சொல்லி வழியனுப்பிய சொற்கள் இவை. அத்தனையும் உண்மை.
நண்பர்களுடன் சில நாட்கள் சுற்றுலா சென்றிருப்போம். அங்கு சில நண்பர்களுடன் நெருக்கம் அதிகமாகியிருக்கும். சிலருடன் புதிதாக சண்டை ஆரம்பித்திருக்கும். சிலருடனான விரிசல் மறைந்து புதிய நட்பு பூத்திருக்கும். சிலருடன் விலகல் இன்னமும் அதிகரித்திருக்கும்.
இப்படி நிறைய விஷயங்கள் நடந்திருந்தாலும் பிரியும் கடைசி தருணத்தில் அத்தனையும் மறைந்து உள்ளுக்குள் ஏதோவொன்று மனதைப் பிசையும். அந்த உணர்வின் கச்சிதமான கலவையாக இந்த எபிசோட் இருந்தது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 104
அனைவருக்கும் முன்பாக எழுந்து விட்ட தீபக், இதுதான் இந்த வீட்டில் இருக்கப் போகும் கடைசி நாள் என்பதை உணர்ந்து கண்கலங்கினார். பொதுவாக தன் உணர்வுகளை பொிதும் வெளிக்காட்டிக் கொள்ளாத தீபக்கையே உணர்ச்சிவசப்பட வைக்கிறது பிக் பாஸ் வீடு.
“இந்த சீசன் மூலமா நம்ம பேரும் பதிவாகும் இல்லண்ணே.. அது போதும். நான்லாம் யாருண்ணே.. சாதாரணமானவன்” என்கிற மாதிரி முத்து சொல்ல “டேய் நீ போட்ட உழைப்பு அசாதாரணமானது. சும்மா ஒண்ணும் இல்ல” என்று முத்துவை தம்பியைப் போல வாஞ்சையுடன் பாராட்டினார் தீபக்.
‘கால் முளைத்த பூவே’ என்கிற ரகளையான பாடல் வேக் அப்பிற்காக ஒலித்தது. முத்து உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். உடலிற்கும் மனதிற்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. அறிவுஜீவிகள் உடலைப் பற்றி கவனிக்காமல் இருப்பது துரதிர்ஷ்டம். அப்படி அலட்சியமாக இருப்பதில் பெருமிதம் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.
மண்டையைக் கழுவிய முத்து - கிண்டலடித்த சவுந்தர்யா
ஹாருகி முரகாமி என்பவர் பிரபலமான ஜப்பானிய எழுத்தாளர். இவரது நூல்கள் உலகம் முழுவதும் ஏராளமாக விற்பனையாகின்றன. பிரபல எழுத்தாளர் என்பதைத் தாண்டி ஓட்டப்பயிற்சி, நீச்சல் போன்ற விளையாட்டுக்களின் மூலம் தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறவர். ‘விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டிய படிசெலும் உடல் கேட்டேன்’ என்று பாரதி வேண்டியதின் காரணமும் இதுதான்.
டாப் 5 போட்டியாளர்களுக்கு க்ரூமிங் செஷன் நடந்தது. ஒவ்வொருவரையும் பயங்கரமாக கலாய்த்துக் கொண்டிருந்தார் முத்து. அவருடைய கனவுப்படியே சிறந்த இயக்குநர் கையில் கிடைத்தால் நல்ல நகைச்சுவை நடிகராக மிளிர்வார். “இத்தனை நாள் மத்தவங்க மண்டையைக் கழுவினான். இப்ப அவன் மண்டையை நல்லா கழுவுங்க” என்று முத்துவிற்கு கவுன்ட்டர் தந்தார் சவுந்தர்யா. மனோரமா, கோவை சரளா போல சவுந்தர்யாவும் ஒரு நல்ல நகைச்சுவை நடிகையாக வருவதற்கு வாய்ப்புண்டு. அனைவரும் விடைபெறும் போது தங்களுக்கு அழகுச் சேவை புரிந்த பணியாளர்களிடம் ‘மறக்காம எனக்கு வோட்டு போடுங்க’ என்று கேட்டுக் கொண்டது நகைச்சுவை.
பச்சை நிறச் சாயத்துடன் ‘மன வலியால்’ கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ரயானுக்கு விடுதலை. வழக்கமான கருப்பு நிறத்திற்கு மாறிய பிறகு ஆசுவாசமாகியிருப்பார். முடியின் நிறம் கருமை என்பதெல்லாம் ஒரு கற்பிதம்தான். மரபணுவில் இருந்து வாழும் நிலத்தின் தட்பவெட்ப நிலை வரை எத்தனையோ விஷயங்கள்தான் ஒரு உயிரினத்தின் புறத்தோற்றத்தை வடிவமைக்கிறது. இதற்கு எத்தனையே பரிணாம வருடங்கள் கடந்திருக்கின்றன. என்றாலும் ‘மனசு வலிக்குது சார்’ என்று ரயான் சொன்ன போது ‘இதுதான் நல்லாயிருக்கு. ஏன் வேண்டாம்ன்னு சொல்றீங்க’ என்பது பொய்யான ஆறுதல் மட்டுமல்ல, ஒரு வகையான வன்முறையும் கூட.
சிரித்து மகிழ்ந்த தருணங்கள் - வீடியோ தொகுப்பு
“இந்த வீட்டை இத்தனை மிஸ் பண்ணுவேன்றது வெளிய போன பிறகுதான் நல்லா தெரியுது. இதைப் பத்தியே பேசிட்டு இருந்தேன். வீட்ல கூட சிரிச்சாங்க” என்று விஷாலிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அன்ஷிதா. உண்மை. அடைக்கப்பட்ட சூழலில் வாழ நேர்வது ஓர் அனுபவம். அந்த வகையில் சிறை வாழ்க்கை கூட ஒருவனுக்கு மறக்க முடியாத அனுபவமாகத்தான் இருக்கும். அதையும் விட பெரிய சிறைதான் இந்த உலகம்.
‘சிரித்து மகிழ்ந்த தருணங்கள்’ என்று அடுத்த வீடியோ தொகுப்பை வெளியிட்டார் பிக் பாஸ். நல்ல தொகுப்பு. சிலருக்கு கண்ணீரைப் பார்க்கப் பிடிக்காது. ஆனால் சிரிப்பு வேண்டாமென்று ஒருவர் கூட சொல்ல மாட்டார்கள். நல்ல தொகுப்பாக இருந்தது. வீடியோ முடிந்தும் கூட ‘அந்தச் சமயத்தில் நீ இப்படி பண்ணேல்ல’ என்று அதைப் பற்றியே சில நிமிடங்களுக்கு சிரிப்புடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.
‘எங்க அண்ணன்.. எங்க அண்ணன்.. அன்பை அள்ளிக் கொடுப்பதில் மன்னன்’ என்கிற மாதிரி முத்து மற்றும் விஷாலிடம் தன் அன்பைப் பகிர்ந்து கொண்டிருந்தார் சாச்சனா. இருவருமே அவருக்கு க்ளோஸ் என்றாலும் ‘தென்ன மரத்துல ஒரு குத்து, பனை மரத்துல ஒரு குத்து’ காமெடி மாதிரியாகவும் தோன்றியது. பவித்ராவிற்கும் தன் அன்பைப் பகிர்ந்தார் சாச்சனா. “வெளில நான் உன் கூட நிப்பேன்’ என்று பிக் பாஸ் தவிர மற்ற அனைவருக்கும் வாக்கு தருகிறார் விஷால். இப்போது அவர் சுனிதாவிடம் தன் பிரியத்தைப் பகிர, கண்ணீர் விட்டு அந்த அன்பை ஏற்றார் சுனிதா.
ஏறத்தாழ அனைவருமே இருக்கும் இந்த சூழலில் ஜாக் மற்றும் அருண் இல்லாததை நினைவுகூர்ந்தது சிறப்பு. அருண் திருமண வேலைகளில் பிஸியாக இருக்கிறாரோ?!
சிரிப்பிற்குப் பிறகு நிகரான உணர்வு அழுகை
சபையைக் கூட்டி அனைவரையும் ஒன்றாக அமர்த்தினார் பிக் பாஸ். பிரிவிற்கான தருணம் என்பதை அனைவரும் உணர்ந்தார்கள். ரியா கண்கலங்கிக் கொண்டிருக்க “அழாத.. ஏன் அழற.. அழுமூஞ்சி’ என்றெல்லாம் பேசும் பிக் பாஸின் குரல் கேட்டது. ரியாவைத்தான் சொல்கிறார் என்று பார்த்தால் இல்லை. அப்படியெல்லாம் மக்கள் வீட்டுக்குள் பரஸ்பரம் பேசிக் கொண்டார்கள். எனில் என்னவென்று விளங்கியிருக்கும். ‘சிந்திய கண்ணீர்த் துளிகளின் தொகுப்பு’.
ஏற்கெனவே சொன்னபடி சிலருக்கு கண்ணீரைப் பார்க்கவே பிடிக்காது. எனக்கெல்லாம் பவித்ரா மூசுமூசுவென்று தொட்டதெற்கெல்லாம் அழுவதைப் பார்க்கும் போது எரிச்சல் கூட வரும். ‘அழக்கூடாதுன்னு நெனச்சேன்’ என்று போட்டியாளர்கள் சொல்வது இதனால்தான். ‘அழும் போது க்ளோசப்ல காமிராவை வைக்காதீங்க. அசிங்கமா தெரியும்’ என்று சவுந்தர்யா கவனமாக கவலைப்பட்டதும் இதனால்தான்.
ஆனால் சிரிப்பைப் போலவே அழுகையும் ஓர் உன்னதமான உணர்வு. உண்மையான அழுகை என்பது அதை நிகழ்த்துபவருக்கும் பார்ப்பவருக்கும் அப்போதைக்கு வலியைத் தந்தாலும் அழுகைக்குப் பிறகு கிடைக்கிற ஆசுவாசத்திற்காகவே வெட்கமின்றி அழலாம். பொய் அழுகைதான் அருவருப்பானது.
“இந்த பிக் பாஸ் வீடு ஏன் ஸ்பெஷல்ன்னு என்னிக்காவது யோசிச்சிப் பார்த்திருக்கீங்களா?” என்று உரையாடலை ஆரம்பித்தார் பிக் பாஸ். ஜாக் எவிக்ஷனின் போது சிலரின் பொய் அழுகையைப் பார்த்து சிரித்துத் தீர்த்த சத்யா கூட இப்போது அழுத முகத்துடன் காணப்பட்டார். “இந்த உலகத்திலேயே நான் நிம்மதியா, பாதுகாப்பா ஃபீல் பண்ண இடம் பிக் பாஸ் வீடுதான்” என்று ரியா அழுகையுடன் சொன்னதில் அர்த்தம் இருந்தது. ஒரு பெண்ணுக்கு செக்யூரிட்டி ஃபீலிங் மிக அவசியமானது.
பிக் பாஸ் என்பது நிகழ்ச்சி மட்டுமல்ல - எமோஷன்
“சமூகவலைத்தளங்களில் வரும் கருத்துக்கள் உங்களை எப்படியெல்லாம் பாதிச்சிருக்குன்னு எனக்குத் தெரியும். ஆனா see the bigger picture. அதுக்காக துவண்டு உக்காரப் போறீங்களா.. இல்லைன்னா.. இந்த அடையாளத்தை அடித்தளமாக வைத்து வெற்றியை நோக்கி ஓடப் போறீங்களான்னு நீங்கதான் முடிவு பண்ணனும். வெளில போங்க.. ஓடுங்க.. வெற்றி அடைங்க. அதைப் பகிர்ந்துக்கறதுக்கு இங்க மறுபடியும் உள்ள வாங்க.. இதுக்காக நான் உங்களுக்கு நன்றி சொல்வேன்” என்று சிறப்பான வாழ்த்துரையைச் சொன்னார் பிக் பாஸ்.
“பிக் பாஸ்தான் எங்க அம்மா.. அந்தக் கருவறையின் கதகதப்பிற்கு நன்றி” என்று ‘வருங்கால ஜனாதிபதி முருகேசன்’ ரேஞ்சிற்கு ஃபீல் செய்வது போல் தோன்றினாலும் முத்துவின் சொற்கள் அந்தச் சூழலில் ஆத்மார்த்தமாக இருந்தன. ஒவ்வொருவரின் பெயரை தனித்தனியாக சொல்லி அழைத்த பிக் பாஸ் “இது நிகழ்ச்சி மட்டுமில்லை. எமோஷன். லவ் யூ ஆல்” என்று சொல்லி அனைவரையும் நெகிழ வைத்தார்.
“இயக்கியது நான். இயங்கியது நீங்கள். இதன் சாடலும் சாபமும் என்னை சேரட்டும். பெருமையும் உயர்வும் உங்களைச் சேரட்டும்” என்று தியாகத்தின் திருவுருவாக வார்த்தைகளில் பின்னியெடுத்தார் பிக் பாஸ். “இந்த வீட்ல இருந்து நாம வெளில போயிடலாம். ஆனா நம்ம நெஞ்சுக்குள்ள ஒரு கூடு இருக்கு. அதுல நாம எப்பவுமே ஒண்ணா இருப்போம்” என்று சிறப்பாக சொன்னதின் மூலம் முத்துவிற்குள் ஒரு சிறந்த வசனகர்த்தா இருப்பதை உணர முடிந்தது.
மனிதர்கள் கூடிச் சந்திக்கும் விருந்தோம்பலின் போது ஒருவரை வாழ்த்தி சில சொற்களை இனிமையாகச் சொல்வது உலகின் பல பகுதிகளில் உள்ள கலாசாரம். ‘டோஸ்டிங்’ என்று அதற்குப் பெயர். அந்தப் பாணியில் நாற்காலியின் மீது நின்று டாப் 5 போட்டியாளர்களை வாழ்த்தினார் தீபக்.
விடைபெறும் நேரம் - வாழ்த்தும் பிரியமும் பெருகிய தருணம்
வெளியில் செல்பவர்கள் அனைவருமே கோப்பைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களை வாழ்த்தினார்கள். ‘இவன் ஜெயிக்கணும்.. இவன் ஜெயிக்கக்கூடாது’ என்று ஆளாளாளுக்கு ஒரு கணக்கு இருந்தாலும் ‘எல்லோரும் ஜெயிக்கணும்’ என்று சம்பிரதாயமாக வாழ்த்தினார்கள். இதையும் மீறி சிலர் செலுத்திய பிரியங்களைக் காண முடிந்தது. ‘உனக்காக வெளில போய் ஓட்டு போடறண்டா” என்று ரயானிடம் பிரியத்தைக் கொட்டினார் ரியா. எனில் அவர் ரயான் வெற்றியடைய விரும்புகிறார் போல.
அனைவரும் பரஸ்பரம் விடைபெறும் போது ‘பவித்ரா.. பார்த்து பத்திரமா போயிட்டு வாங்கம்மா” என்று காமெடி செய்தார் முத்து. (நடிகன்டா.. நடிகன்டா!) “இந்த வீடு எனக்கு நல்லதொரு பாடத்தை சொல்லித் தந்தது” என்று விஷாலிடம் தர்ஷிகா சொன்னது அர்த்தபூர்வமானது. கடந்த முறை போலவே இந்த முறையும் அன்ஷிதாவின் காதில் கிளுகிளுப்பாக ரகசியம் பேசினார் விஷால். (இந்த சீசனில் இப்படி ரகசியம் பேசுவதை கண்டிக்கவே இல்லையே?!).
‘வெளில கிளம்புங்க’ என்று பிக் பாஸ் சொன்னாலும் கிளம்ப மனமில்லாமல் கார்டன் ஏரியாவில் கூடி மக்கள் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார்கள். ‘ஒரு பாட்டு போடுங்க பிக் பாஸ்’ என்று அவர்கள் கெஞ்ச, சரி, இதுல இருந்து ஃபுட்டேஜை தேத்துவாம்’ என்று கருதிய பிக் பாஸ் ‘ஒரு நாளில் வாழ்க்கை’ என்கிற அருமையான பாடலை ஒலிபரப்பினார். ‘எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும் / அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்’ என்று மனதின் வலியை ஆதரவாகத் தடவி ஆசுவாசப்படுத்துவது போன்ற வார்த்தைகளை எழுதி இந்தப் பாடலை சிறப்பாக்கியிருந்தார் கவிஞர் நா.முத்துக்குமார். இசையமைத்து அருமையாகப் பாடியிருந்தார் யுவன். இத்தனை அருமையான பாடல் படத்தில் வரவில்லை. (ஏன் இப்படிச் செய்தீர்கள் செல்வராகவன்?!)
‘Toxic free season’ - சிறப்பாக குறிப்பிட்ட சுனிதா
அனைவரும் க்ரூப் போட்டோவிற்காக உற்சாகக் கூச்சலுடன் ஒன்று கூடினார்கள். பிறகு எவிக்ஷன் செய்யப்பட்ட ஆர்டரில் ஒவ்வொருவராக வெளியேறியது சுவாரசியமான காட்சி. வெளியேறுவதற்கு முன்பாக டாப் 5 போட்டியாளர்களை மனமார வாழ்த்தி விட்டுச் சென்றார்கள்.
‘Toxic free season’ என்று சுனிதா குறிப்பிட்டது உண்மை. சில சீசன்களில் வன்மமும் பழிவாங்கலும் விரோதமும் குரோதமும் கொப்பளித்துக் கொண்டேயிருந்தது. அஸிம், விக்ரமன், ஆரி, பாலாஜி போன்றவர்கள் இருந்த சீசன்களைச் சொல்லலாம். ஆனால் இந்த சீசன்களில் சில சண்டைகள் டாஸ்க்கில் நேர்ந்தாலும் பொிய அளவில் நச்சுத்தன்மை ஏதுமில்லை. இதர நேரங்களில் அனைத்தையும் துடைத்து விட்டு நண்பர்களாக இருந்தார்கள். அதனாலேயே இந்தச் சீசன் பிரத்யேக பெருமையை அடைகிறது.
‘வாழ்க்கையில் போராடுகிற சாமானியப் பெண்களின் பிரதிநிதியாக நான் பங்கேற்றேன்’ என்று ரியா சொன்னது ஆழமான வார்த்தைகள். ‘உடன்பாடு, முரண்பாடு’ என்று குழப்பிய ஆனந்தி பிறகு தன் கேள்வியை தெளிவாக்கிய போது ‘ஒரு போட்டியாளருக்காக இன்னொருவரை திட்டுவதில் உடன்பாடில்லை’ என்கிற கருத்தை அனைவரும் வழிமொழிந்தார்கள். ‘ஒருத்தரோட வாய்ஸூக்கு நான் பயமும் மரியாதையும் தந்தேன் என்றால் அது உங்க வாய்ஸ்தான்’ என்று பிக் பாஸிடம் பாசமாக சொன்னார் ஜெப்ரி.
“என்னால இத்தனை அதிக அன்பைக் கொடுக்க முடியும்ன்றதை எனக்கே காட்டித் தந்த இடம் இந்த வீடுதான்” என்று மஞ்சரி சொன்ன சொற்களும் சிறப்பு. “நீங்கள் அனைவரும் வெளியே வரும் போது ஒரு புதிய உலகம் காத்திருக்கும்” என்றார் தீபக். இதெல்லாம் சம்பிரதாயமான வாழ்த்துரைகள் போல தோன்றினாலும் தங்களின் பிக் பாஸ் அனுபவத்தின் மூலம் அவர்கள் சொல்லும் போது அவற்றில் தன்னிச்சையாக உண்மை எப்படியோ உறைந்திருப்பதை நம்மால் உணர முடிகிறது. “நாங்க எல்லோரும் வெளியே போயிட்டப்புறம் கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா இது உங்க மோமெண்ட். கொண்டாடுங்க. ஒரு நாள்தான்” என்று சொல்லி விட்டுச் சென்றார் தீபக்.
தீபக் சொல்லி விட்டு்ச் சென்றதைப் போலவே அத்தனை பெரிய வீட்டில் ஐந்து நபர்களும் கார்டன் ஏரியாவில் ஒன்றாக அமர்ந்திருந்தார்கள். “யப்பா.. எவ்ளோ அமைதியா இருக்கு.. பாரேன்.. எத்தனை பேர் கசகசன்னு பேசிட்டிருந்த இடம் மாதிரியா இருக்கு?” என்று வியந்தார்கள். “இந்த இடத்துல கொஞ்ச நாள் முன்னாடி பெட்டி டாஸ்க் ஆடினோம். மரண பீதியா இருந்தது” என்று பவித்ரா சொல்ல “இருந்ததிலேயே பெஸ்ட் டாஸ்க் அதுதான்” என்றார் ரயான். “எல்லோருக்குமே வாய்ப்பு கிடைச்சது” என்றார் முத்து.
பிடித்த போட்டியாளரை விடவும் தகுதியான போட்டியாளர் வெல்வதுதான் முக்கியம்
“இத்துடன் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்படுகிறது. மக்களிடம் ஏதாவது சொல்ல வேண்டுமா?” என்று இறுதியான வாய்ப்பை தந்தார் பிக் பாஸ். ஐவரும் ஒவ்வொருவராக எழுந்து நின்று மக்களிடம் தங்களின் அன்பையும் நன்றியையும் பகிர்ந்து கொண்டார்கள்.
அவ்வளவுதான். இந்த சீசனைப் பொறுத்தவரை அனைத்தும் முடிந்து விட்டது வெற்றியாளர் என்பதை அறிவதுதான் ஒரே சஸ்பென்ஸ். முன்பெல்லாம் இறுதி நாள் நிகழ்வு ‘live’ ஆக ஒளிபரப்பாகும். வெற்றியாளரை அறிவது சஸ்பென்ஸாக இருக்கும். அப்போது கூட லைவ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் அங்கிருந்தே வெற்றியாளரை சமூகவலைத்தளத்தில் தெரிவித்து விடுவார்கள்.
ஆனால் இந்த சீசனின் ஃபினாலே நிகழ்ச்சியின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகத் தெரிகிறது. எனவே வெற்றியாளர் வரிசையும் வெளியாகி விட்டது. அறியாதவர்களுக்காக அந்த சஸ்பென்ஸை அப்படியே வைப்போம். நிகழ்ச்சியின் போது தெரியட்டும்.
ஒன்றே ஒன்றுதான். நமக்குப் பிடித்தமான போட்டியாளர் வெல்ல வேண்டும் என்கிற ஆவேசத்தை விடவும் தகுதியான போட்டியாளர் வெல்ல வேண்டும் என்று ஆரோக்கியமாக நினைப்பதும் அதற்காக வாக்களிப்பதும்தான் உண்மையான ரசிக மனப்பான்மை. அப்படிப்பட்ட தகுதியாளர் யாராக இருந்தாலும் அவருக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்!.
ஃபினாலே நிகழ்ச்சியில் என்னென்ன சுவாரசியங்கள் நடந்தன என்பதை நாளைய கட்டுரையில் பார்ப்போம். அத்துடன் இந்தக் கட்டுரைத் தொடர் நிறைவுறும். தினமும் இந்தத் தொடரை வாசித்தவர்கள், கமெண்ட் இட்டவர்கள், பாராட்டியவர்கள், இன்னமும் மேம்படுத்தும் வகையில் பாசிட்டிவ் விமர்சனங்களைச் சொன்னவர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.