நூறு பெளர்ணமிகளுக்கு ஸ்டாலின் முதல்வராக தொடர்வார்: அமைச்சர் செந்தில் பாலாஜி
Rifle Club Review: `மாஸ் - ஆக்ஷன் - மாஸ்' - சேட்டன்கள் கூடிய இந்த கிளப் கவனிக்க வைக்கிறதா?
திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற `ரைஃபிள் கிளப்' திரைப்படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
மங்களூரூவில் டானாக கொடி கட்டிப் பறக்கும் தயானந்துக்கு (அனுராக் காஷ்யப்) இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஒரு நாள் இந்த டானின் இரண்டு மகன்களில் ஒருவர் ஒரு காதல் ஜோடியிடம் வம்பு செய்கிறார். அந்த காதல் ஜோடி அவனை அடித்துவிட்டு அங்கிருந்து தப்பிவிடுகிறார்கள். இவர்கள் அடித்த அடியில் அந்த டானின் மகன் இறந்துவிடுகிறார். மற்றொரு பக்கம், ரொமான்டிக் ஹீரோவாக வலம் வரும் ஷாஜகான் (வினீத் குமார்) தயாரிப்பாளரின் பேச்சைக் கேட்டு ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுக்க ஆயத்தமாகிறார்.
அதற்காக தூப்பாக்கி சுடுதல் பயிற்சியை மேற்கொள்ள வயநாடுவில் இருக்கும் `ரைஃபிள் கிளப்' குடும்பத்தைச் சந்திக்கிறார். டானின் மகனைக் கொலை செய்த காதல் ஜோடி இந்த ரொமான்டிக் ஹீரோவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். ஹீரோ ஷாஜகானைத் தேடி ரைஃபிள் கிளப்புக்குச் சென்று உதவி கேட்கிறார்கள் இந்த காதல் ஜோடி. இதற்கிடையில் அவசர சிந்தனையில் சகோதரனைக் கொலை செய்தவர்களை பழிதீர்க்க அந்த ஜோடியை பின் தொடர்ந்து ரைஃபிள் கிளப்புக்கு சென்று உயிரை பறிக்கொடுக்கிறார் டானின் மற்றொரு மகன் பீரா (ஹனுமேன்கைன்ட்). தனது இரு மகன்களின் கொலைக்கு டான் தயானந்த் பழிதீர்த்தாரா? ரைஃபிள் கிளப் குடும்பத்துக்கு இருக்கும் மாஸ் எப்படியானது? என்பதை வெஸ்டர்ன் ஸ்டைலில் சொல்கிறது இந்தத் திரைப்படம்.
ரைஃபிள் கிளப் குடும்பத்தைச் சேர்ந்தவராக திலீஷ் போத்தன் `வேட்டை மன்னனாக' நடிப்பிலும் புகுந்து விளையாடி அப்படியொரு மாஸ் நாயனாக முதன்மை பெறுகிறார். அதிலும் அந்த க்ளைமேக்ஸ் ஆக்ஷன் காட்சியில் அனல் பறக்க களத்தில் ஓய்வின்றி புகுந்து விளையாடியிருக்கிறார். மகன்களை கொலை செய்தவர்களைப் பழிவாங்கத் துடிக்கும் வில்லனாக அதிரடி காட்டும் அனுராக் காஷ்யப் பல காட்சிகளில் பயம் காட்டுகிறார். ஆங்காங்கே அதே டெரர் டோனில் அவர் செய்யும் ஜோக்குகளும் சிரிக்க வைக்கின்றன.
ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாலும் `ரைபிள் கிளப்' குடும்பத்தின் மாஸ் எத்தகையது? என்பதை தனது உதாசீனப்படுத்தும் சிரிப்பால் விளக்குகிறார் விஜயராகவன். இணையத்தைத் தனது இசையால் கலக்கிக் கொண்டிருக்கும் ராப் பாடகர் ஹனுமேன்கைண்ட் இந்தப் படத்தில் நடிகராக அறிமுகமாகி வில்லனிசத்தை வெளிப்படுத்தி `குட்' மார்க் வாங்குகிறார். இவர்களைத் தாண்டி, தங்களின் டீசன்ட்டான பங்களிப்பை தர்ஷனா ராஜேந்திரனும், வினீத் குமாரும் கொடுத்திருக்கிறார்கள்.
`மாஸ், கூஸ்பம்ஸ்' என ஒவ்வொரு காட்சியிலும் டஜன் கணக்கில் சேர்த்து படத்தை மெருகேற்றியிருக்கிறார்கள் திரைகதையாசிரியர்கள் ஷ்யாம் புஷ்கரண், திலீஷ் கருணாகரன், சுகாஸ் & ஷர்ஃபூ. ஆனால், கதையில் ஆழமில்லாதது பெரிய மைனஸ் பாஸ்! கதாபாத்திரத்தின் எண்ண நகர்வுகளுக்கேற்ப காட்சிகள் என்பதைத் தாண்டி முழுக்க முழுக்க மாஸ் தன்மையை மட்டுமே மனதில் வைத்து எழுத்துப் பணிகளை மேற்கொண்டது எமோஷன்களை வலுவிழக்கச் செய்கிறது.
இதுவே கதாபாத்திரத்தின் மாஸ் தன்மையைத் தாண்டி வேறு எந்த விஷயத்தையும் ரசிக்கவிடாமல் பாழாக்குகிறது. திருப்பத்தைக் கொண்டு வரும் காட்சிகள் ஆங்காங்கே காரணமின்றி என்ட்ரி கொடுப்பது`ஏன், எதற்கு' என அடுகடுக்கான கேள்விகளை எழுப்புகிறது. வேட்டையாடுவதற்காக முன்பு பின்பற்றப்பட்ட நுட்பங்கள், தூப்பாக்கிகள் குறித்தான ஆராய்ச்சிகள் என இயக்குநர் ஆஷிக் அபு இந்தக் களத்துக்காக ஆர்வத்துடன் மேற்கொண்டிருக்கும் உழைப்பு ஆச்சர்யப்படுத்துகிறது.
ரைஃபிள் கிளப்பில் நடக்கும் சண்டைக் காட்சிகளை குண்டுகளுக்கு இணையான வேகத்தில் பறந்து படம்பிடித்திருக்கிறது ஆஷிக் அபுவின் கேமரா. மாஸ் காட்சிகளுக்கு தனது கைவண்ணத்தால் கூடுதல் பலம் சேர்கிறார் படக்தொகுப்பாளர். 90-களில் நடக்கும் கதைகளம் என்பதால் அதற்கேற்ப கலை இயக்குநர் சில ரெட்ரோ வடிவில் செட் அமைத்து கவனம் ஈர்க்கிறார்.
அதே போல போட்டிபோட்டு தங்களுடைய மாஸ் தன்மையை வெளிப்படுத்தி பின்னணி இசையில் மிளிர்கிறார்கள் விஜயன், யக்சன் மற்றும் நேகா நாயர். ரெக் விஜயனின் இசையமைத்துள்ள ராப் பாடல்கள் இஷ்டத்திற்கு குண்டுகள் போல பறந்துக் கொண்டிருக்கும் ஸ்லோவ் மோஷன் ஆக்ஷன் காட்சிகளை ஒழுங்கப்படுத்துகிறது. மாஸ் காட்சிகளை தாண்டி சரியாக குறி வைத்து கதையையும் இன்னும் ஆழமாக சொல்லியிருந்தால் `தியேட்டர் மெட்டீரியல்' என்பதைத் தாண்டி நல்ல பெருமையும் இந்த ரைபிள் கிளப்புக்குக் கிடைத்திருக்கும்.
படம் பார்த்தவர்கள், ரைபிள் கிளப் படத்துக்கு 10 -க்கு எத்தனை மதிப்பெண்கள் கொடுப்பீர்கள் என்பதைக் கமென்ட்டில் சொல்லுங்க மக்களே!