காஸா போர் நிறுத்தம் அமலானது!
ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போர் முடிவுக்கு வந்தது.
காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்தாண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதன் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய இந்தப் போரில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், ஓராண்டுக்கும் மேலான போரை நிறுத்த, கடந்த வாரம் அமெரிக்கா, இஸ்ரேல், கத்தார் நாடுகள் போர் நிறுத்தம் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி, போர் நிறுத்தக் காலமான 6 வாரங்களுக்கு இருதரப்பினரும் அமைதியாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பிணைக் கைதிகள் குறித்த விவரங்களை வெளியிடாவிட்டால், போர் நிறுத்தம் அமலுக்கு வராது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்திருந்தார்.
இதற்கிடையே, பிணைக் கைதிகளின் விவரங்களை இஸ்ரேலிடம் ஹமாஸ் வழங்கியது. இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வரவேண்டிய நிலையில், சுமார் 3 மணிநேர தாமதத்துக்குப் பின்னர், இந்திய நேரப்படி பிற்பகல் 2.45 மணியளவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததையடுத்து, இரு நாடுகளின் பல பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க:நாளை பதவியேற்கவுள்ள டிரம்ப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்! ஏன்?
ஆனால், ஒப்பந்தம் அமலுக்கு வருவதற்கு முன்னதாக, காலையில் நடந்த 2 மணிநேரப் போரில் 8 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி, ஹமாஸ் தரப்பினர் 33 பிணைக் கைதிகளையும், இஸ்ரேல் தரப்பினர் 737 பாலஸ்தீனர்களையும் விடுவிக்கவுள்ளனர். இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் உள்பட 3 அமைச்சர்கள் ராஜிநாமா செய்தனர்.