``யானை – மனித மோதலை தவிர்க்க ஏ.ஐ கேமரா தொழில்நுட்பம்'' -களமிறங்கிய மலை கிராமம்
கோவை மாவட்டம் முழுவதுமே யானை – மனித மோதல் பிரச்னை அதிகரித்து வருகிறது. அதிலும் மேட்டுப்பாளையம் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் யானை மற்றும் பிற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் யானைகளின் வருகை அதிகம் இருப்பதால், யானை – மனித மோதல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னையை சமாளிப்பதற்கு, மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கெம்மராம்பாளையம் கிராமம் ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் களமிறங்கியுள்ளனர்.
கெம்மராம்பாளையம் ஒரு மலை கிராமம். அந்த ஊராட்சி தலைவர் செல்வி நிர்மலா, வனவிலங்குகளை விரட்டுவதற்கு ஏ.ஐ கேமரா பொருத்தப்பட்ட ஃபார்ம் கார்ட் (FARM GAURD) என்ற கருவியை முதல் முறையாக அமைத்துள்ளனர். கெம்மராம்பாளையம் ஊர் பஞ்சாயத்து தலைவர் செல்வி நிர்மலா கூறுகையில். "மலை கிராமங்கள்ல யானை – மனித மோதல் பிரச்னை அதிகரிச்சுட்டே இருக்கு. இதுக்கான தீர்வு காலத்தோட கட்டாயம். ‘ஸ்மார்ட் டிரைபல் ஃபார்மிங்’னு ஒரு திட்டம் இருக்கு. அதுல இந்தப் பிரச்னை பத்தி சொன்னேன்.
எங்க கிராமத்துல விவசாயம் செய்ய எல்லா வசதியும் இருந்தும் யானை, மான் போன்ற விலங்குகளோட வருகை அதிகமா இருக்கு. இதுக்கு தீர்வா இந்த ஏ.ஐ தொழில்நுட்பம் கிடைச்சிருக்கு. இப்ப சோதனை முயற்சில வெச்சுருக்கோம். நமக்காக உழைக்கிற விவசாயிகளுக்கு எந்தவிதமான தொந்தரவும் இருக்கக்கூடாது. அதுதான் எங்க நோக்கம்”என்றார்.
ஏ.ஐ கருவி பொருத்தப்பட்டுள்ள மருதன் என்பவரின் தோட்டத்துக்கு சென்றோம், "மலை அடிவாரத்துல இருக்கிறதுனால யானைகள் தொல்லை அதிகமா இருக்கும். இப்போ இங்க ஒரு கருவி வெச்சுருக்காங்க. முன்னாடிலாம் நிம்மதியா ஒரு வாய் சோறு திங்க முடியாது. திடீர்னு யானை வரும். 10-15 உருப்படி (யானை கூட்டம்) சேர்ந்து வரும். எங்களால ஒண்ணுமே பண்ண முடியாது. வீட்ல நிம்மதியா தூங்க கூட முடியாது. பிள்ளைங்க படிக்க போனா காலையில ஆறு மணி ஏழு மணிக்கு யானைகள் வரும். இதனால அவங்க படிப்பு கெடும். யானை இந்த மாதிரி எந்த விலங்கு வந்தாலும் கேமரா படம் பிடித்து காட்டிடுது. அதிகாரிகளுக்கு அனுப்பிவிடுகிறது. அவர்களும் உடனே வந்துடறாங்க. யானை, காட்டு பன்றி, காட்டெருமைனு எந்த விலங்குகள் வந்தாலும் அந்த கருவில இருந்து சத்தம் வருது. அந்த சத்தம் கேட்டே மிருகம் எல்லாம் ஓடிருது. அந்த சத்தம் கேட்டுச்சுன்னா நாங்களும் எச்சரிக்கையா சுதாரிச்சுக்குவோம். இது எங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கு" என்றார்.
இந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ள BGENT நிறுவனத்தின் சி.இ.ஓ பிஜி ராகவந்திர். "விலங்குகள் வரப்ப, எதிரில் மனுஷங்க நின்னா என்ன பண்ணுவாங்களோ அந்த மாறி யோசிச்சோம். கேமரால விலங்குகள் எதாச்சும் தென்பட்டா, சத்தம் எழுப்புற மாறி பண்ணிருக்கோம்.
எந்த ஒரு பாதிப்பும் வராம விலங்குகளை விரட்ட முடியும் அப்புறம் யாரோட நிலத்துக்குஅந்த விலங்கு வந்துருக்கோ அந்த நிலத்தோட சொந்தக்காரருக்கும், பக்கத்துல இருக்குற வனத்துறை அலுவலகத்துக்கும் செய்தி அனுப்புற மாறி புரோக்ராம் செட் பண்ணிருக்கோம். தமிழ்நாடு கவெர்ன்மென்ட் கிட்ட இதுக்கு நல்ல சப்போர்ட் இருக்கு. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, அசாம், மத்தியபிரதேசம், உத்திரப்பிரதேசம் மாநிலங்களிலும் இதை செயல்படுத்துவதற்கான ஆலோசனை நடந்து வருகிறது" என்றார்.