Relationship: உங்க கல்யாண வாழ்க்கை எந்த நிலைமையில் இருக்கு..? கண்டுபிடிக்கலாம் வ...
BCCI: விதிகளை அப்டேட் செய்த பிசிசிஐ, அதற்கேற்ப தனது அணியை அப்டேட் செய்திருக்கிறதா?
எப்போதுமே வெற்றிகள் வாழ்த்துகளோடு முற்றுப்பெறும், தோல்விகள்தான் பக்கவிளைவுகளாகத் தொடர் கேள்விகளால் துளைத்தெடுக்கும். இந்திய அணியின் தற்போதைய நிலைமையும் அதுதான். இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரை இழந்தது, ஹோம் டெஸ்டிலேயே நியூசிலாந்துக்கு எதிராக வாஷ் அவுட் ஆகி சரணாகதி அடைந்தது, ஆஸ்திரேலியாவில் மோசமான செயல்பாட்டினால் ஏறக்குறைய பத்தாண்டுகளாகத் தன்வசமிருந்த பார்டர் கவாஸ்கர் தொடரை இழந்ததோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் நழுவவிட்டது என வரிசையாகத் தோல்விமுகம். ஐசியூ-வில் இருக்கும் அணியின் இமேஜை மீட்டெடுக்க அணியின் தற்போதைய அவசரத்தேவை சாம்பியன்ஸ் டிராபிக்கான தொடரில் ஒரு மாபெரும் வெற்றி.
சரி! முந்தைய தொடர்களில் செய்த தவறுகளைக் களையும்படியான ஓர் அணியை சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்தியா தேர்ந்தெடுத்திருக்கிறதா? பத்து விதிகளை உருவாக்கியதிலிருந்த ஆர்வம், அணி கட்டமைப்பிலிருந்ததா?
சமீபத்தில் இந்திய வீரர்களுக்கு பிசிசிஐயால் அனுப்பப்பட்டதாக பத்து விதிகள் வெளியாகின. சர்வதேசப் போட்டியில்லாத சமயங்களில் டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் ஆடவேண்டுமென்பது கட்டாயமாக்கப்படுவது, சுற்றுப்பயணங்களுக்கு வீரர்கள் எவ்வளவு எடையுள்ள பைகளை எடுத்துச் செல்லவேண்டும் என்ற கட்டுப்பாடு, தனக்கென தனியாகச் சிகையலங்கார நிபுணர்கள், பாதுகாப்பு வீரர்கள் உள்ளிட்டவர்களை அழைத்து வரக்கூடாது, பயிற்சிக்கோ, போட்டிக்கோ செல்லும்போது அணியுடன்தான் செல்லவேண்டும் தனியாகப் பயணிப்பதோ வேறிடத்தில் தங்குவதோ கூடாது, எல்லாப் பயிற்சி முகாம்களிலும் கண்டிப்பாகப் பங்கேற்க வேண்டும், போட்டிகளின் நடுவே பிசிசிஐ ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அதேசமயத்தில் தனிப்பட்ட முறையில் தங்களுக்கான விளம்பரப் படப்பிடிப்புகளில் அந்தக் காலகட்டத்தில் பங்கேற்பது கூடாது என வரிசையாகப் பல நிபந்தனைகளை பிசிசிஐ அமல்படுத்தியுள்ளது. இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல் 45 நாட்களுக்கும் அதிகமாக அணியின் சுற்றுப்பயணம் நீடித்தால் இறுதி இருவாரங்களுக்கு மட்டுமே குடும்பங்கள் வீரர்களுடன் வந்து தங்குவதற்கு அனுமதி என்றும் கூறியிருப்பதுதான் அணி வீரர்கள் மத்தியில் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
அணிக்குள் நிலவும் சூப்பர் ஸ்டார் கலாசாரத்தை உடைத்து, ஒருங்கிணைப்பையும், ஒழுங்கையும் ஒருங்கே கொண்டு வருவதற்கான பிசிசிஐ-யின் முயற்சியே இதுவென்றாலும் இதற்கான வரவேற்பும் எதிர்ப்பும் சரிசமமாகவே உள்ளது.
இது பலருக்கும் புதியதாகத் தோன்றினாலும் இதில் பெரும்பாலானவை எழுதப்படாத விதிகளாகக் காலங்காலமாக இந்திய அணியிலிருந்து வருபவைதான். முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் உள்ளிட்ட பலரும் இதையே உறுதி செய்துள்ளனர். இருப்பினும் ஒரு புள்ளியில் நடைமுறைகள் மாறி, விதிகள் மீறப்பட்டு, வீரர்களின் நட்சத்திர அந்தஸ்துக்கு ஏற்றாற்போல் வளைக்கப்பட்டுள்ளன. அப்படி நேர்ந்திருப்பின் அந்தக் கட்டுப்பாட்டை மீறத் துணை போனவர்களிடம்தான் கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்கின்றனர் முன்னாள் வீரர்கள். ஹர்பஜன், "தொடர் எதிர்பார்த்ததற்கு முன்பாகவே முடிந்துவிட்டால், அடுத்த தொடருக்குக் குறுகிய காலமே இருக்கும்பட்சத்தில் வீரர்கள் தத்தம் சொந்த ஊருக்குக் கிளம்பாமல் இணைந்தே தங்கியிருந்து அடுத்த தொடருக்கு ஆயத்தமாவார்கள்" என்று கூறியிருந்தார். ஆகமொத்தம் இவையெல்லாம் 'சொல்லாமலே கடைப்பிடிக்கப்படும்' என்பதுதான் பலரும் கூறியிருந்தது. இந்த விதிக்கெதிரான நேர்மாறான கருத்துக்களும் எழாமல் இல்லை.
"டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் பங்கேற்க நேரம் எங்கிருக்கிறது?" என்பதுதான் ரோஹித்தின் கேள்வி. காரணம் ஐபிஎல் சாளரம் தவிர்த்து அக்டோபர் - மார்ச் மாதங்களில்தான் இந்திய அணி அதிகளவிலான சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கிறது. அப்படியிருக்க அந்தச் சமயத்தில் நடக்கும் டொமெஸ்டிக் போட்டிகளில் பங்கேற்பது இயலாதது என்று கூறியிருந்தார். இருப்பினும் பல கிரிக்கெட் ஆர்வலர்களும் இந்த விதி சரியென்ற ஒருமித்த கருத்தையே கூறிவருகின்றனர். சச்சின், கங்குலி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் ரஞ்சி தொடரில் பங்கேற்க எப்போதும் எவ்விதத் தயக்கமும் காட்டியதில்லை, இழுக்காக நினைத்ததில்லை. அது பயிற்சிப் பாசறை மட்டுமல்ல, அனுபவங்களின் குவியல் என்றே வாதிட்டு வருகின்றனர். உண்மைதான்! முன்னதாக ஸ்ரேயாஸ் மற்றும் இஷான் கிஷன் விஷயத்தில் காட்டப்பட்ட கண்டிப்பு இங்கேயும் தொடரவேண்டும். டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் பங்கேற்காததின் விளைவு சம்பள ஒப்பந்தம் முதல் ஐபிஎல்லில் பங்கேற்பது வரை நீண்டால் மட்டுமே இதன் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்வர் என்பதே உண்மை. பண்ட், ரோஹித் ஆகியோரின் பேட்களை பட்டைத் தீட்டிக்கொள்ள டொமெஸ்டிக் களத்தைக் காண வைத்திருக்கிறது இக்கட்டுப்பாடு. இது ஃபார்மில் இல்லாத வீரர்கள் இழந்த நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுக்க உதவும்.
மற்ற விதிகளைவிட அதிக வீரியமுள்ள புயலைக் கிளப்பியிருப்பது குடும்பங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுதான். வீரர்களின் ஒட்டுமொத்த கவனமும் அணியிலும் போட்டியிலும்தான் இருக்க வேண்டும் என்பதே நோக்கம். ஒருதரப்பு, "முன்பெல்லாம் பெரியளவில் வீரர்களின் மனைவிகளையோ அல்லது குடும்பத்தினரையோ அயல்நாட்டுத் தொடரின்போது பார்க்க முடியாது, இப்போதைய வீரர்கள் இதனை ஃபேமிலி வெக்கேஷனாக மாற்றிவிட்டனர், அவர்களது கவனச்சிதறல் அங்கிருந்துதான் தொடங்குகிறது" என்கிறது. மற்றொரு தரப்போ, "முந்தைய தலைமுறை வீரர்கள் இடைவெளியின்றி இத்தனை போட்டிகளில் மூன்று ஃபார்மேட்களிலும் தொடர்ச்சியாக ஆடவில்லையே... அது உளவியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் குடும்பங்கள் உடன் இருப்பதில் தவறில்லை" என்று வாதிடுகிறது. செய்தியாளர்கள் சந்திப்பில் மைக் ஆனில் இருப்பதைக் கவனிக்காமல்(!!!) கேப்டன் ரோஹித், அகர்கரிடம் இது குறித்து பிசிசிஐ தலைவரிடம் பேசப்போவதாகக் குறிப்பிட்டிருந்தார். இதே குடும்பங்கள் புடைசூழவே இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றிருந்தது. அப்படியிருக்க சமீபத்திய தோல்விகளின் விளைவாக இந்த விதிகளைச் சாட்டையாக பிசிசிஐ கையிலெடுப்பது, "கண்ணாடியைத் திருப்பினால்..." டயலாக்கைத்தான் நினைவுக்குக் கொண்டுவருகிறது.
சாம்பியன்ஸ் டிராபிக்கான அணி தேர்விற்கு வருவோம். 2023-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையில் பாண்டியாவிடமிருந்து துணைக்கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. அணியில் பல சீனியர் வீரர்களும் இருக்கும்போது தற்போது அது கில்லிடம் கொடுக்கப்பட்டுள்ளது பலருக்கும் ஏற்புடையதாக இல்லை. பயிற்சியாளர் கம்பீர், பாண்டியாவே துணைக்கேப்டனாகத் தொடரவேண்டும் என்று கோரியதாகவும் அதை அகர்கர் மற்றும் ரோஹித் மறுத்ததாகவும் செய்திகள் வெளிவருகின்றன. ஜெய்ஸ்வால் ஒருநாள் போட்டிகளுக்காக அழைக்கப்பட்டிருப்பது சரியான நகர்வென்றாலும் கில்லின் இருப்பு அவரது வாய்ப்பைத் தட்டிப் பறிக்கிறது.
சஞ்சு சாம்சனால் ரிஷப் பண்ட்டின் இடம் பறிபோகலாம் என்று பலரும் கருத, பிசிசிஐ பண்ட்டின் பக்கமே சாய்ந்திருக்கிறது. கடந்தாண்டு இந்தியா சொற்ப ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தது. எனவே சஞ்சுவுக்கு அவற்றில் பெரியளவில் வாய்ப்புகள் கிட்டவில்லை. ஆனாலும்கூட இந்தியா பங்கேற்றிருந்த டி20-கள் பெரும்பாலானவற்றில் சஞ்சு நன்றாக ஆடியிருந்தார், அதற்கு முன்பு நடந்த 50 ஓவர் போட்டிகளிலும் சிறப்பாகவே செயல்பட்டிருந்தார். இருப்பினும் வழக்கம்போல அவர் வஞ்சிக்கப்பட்டு விட்டார். நியாயமற்ற முறையில் புறக்கணிக்கப்பட்டு இருக்கும் இன்னொரு வீரர் கருண் நாயர். ஒன்பது போட்டிகளில் 779 ரன்களோடு விஜய் ஹசாரே தொடரில் அனல் பறக்கவைத்த அவரை ஒட்டுமொத்தமாக நிராகரித்திருக்கிறது பிசிசிஐ. டொமெஸ்டிக் சர்க்யூட்டில் மிளிரும் ஒருவரை அணிக்குள் கொண்டுவராவிட்டால் அத்தொடர்களை நடத்துவதற்கான அர்த்தம்தான் என்ன என்பதை பிசிசிஐதான் சொல்லவேண்டும். தனது ரெட் ஹாட் ஃபார்மில் உள்ள ஒருவரைப் பயன்படுத்திக் கொள்ளாததால் அவருக்கு மட்டுமல்ல இழப்பு, அணிக்கும்தான்.
ஷமி திரும்பியிருப்பது மகிழ்ச்சிக்குரியதே எனினும் பும்ரா - ஷமி என பிரதான பௌலர்கள் இருவருமே காயத்திலிருந்து மீண்டு வருவது அணிக்குச் சற்றே பின்னடைவுதான். டெத் பௌலிங்கைக் கருத்தில்கொண்டு சிராஜுக்குப் பதிலாக அர்ஷ்தீப் இறக்கப்படுவதும் சபாஷ் சொல்ல வைத்திருக்கிறது. நடந்து முடிந்த விஜய் ஹசாரே தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் அர்ஷ்தீப்தான் முதலிடத்தில் முடித்தார். எனவே அவரது பங்கு முக்கியமானதாக மாறும். இருந்தாலும் நான்கு ஸ்பின்னர்களை எடுத்ததற்குப் பதிலாக சிராஜ் அணியில் இடம்பெற்றிருக்கலாம், ஷமி மற்றும் பும்ராவின் பளுவை அது ஓரளவு குறைக்கும்.
இந்தியா ஆடும் போட்டிகள் துபாயில் நடப்பதை மனதில் வைத்து சுழற்பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்ற அணியைக் கட்டமைத்துள்ளனர். அமெரிக்காவிலும், கரீபியன் களங்களிலும் டி20 உலகக்கோப்பையின் போது கைகொடுத்த அதே அணுகுமுறையை இங்கேயும் விரிவுபடுத்தியுள்ளார் ரோஹித். அக்ஸர் படேல், குல்தீப், வாசிங்டன் சுந்தர், ஜடேஜா என ஸ்பின் படை பலமாகவே காணப்படுகிறது. விஜய் ஹசாரேவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தி தேர்ந்தெடுக்கப்படாதது குறித்து கேள்விகள் எழுந்தாலும் மேலே சொன்ன நான்கு ஸ்பின்னர்களுமே பேட்டிங்கில் அணிக்கான கூடுதல் ரன்கள் வருவதையும் உறுதிசெய்பவர்கள் என்ற புள்ளியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் எனப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஷமி, குல்தீப், அர்ஷ்தீப் ஆகியோர் இணைந்திருப்பதால் பௌலிங் படை வலுப்பெற்றிருக்கிறது, சிறப்பாகவும் மாறியிருக்கிறது. ஒரு சில பேட்ஸ்மேன்களின் ஃபார்ம் அச்சுறுத்தினாலும் முந்தைய தொடர்கள் வேறு ஃபார்மேட் என்பதால் லிமிடெட் ஓவர்கள் போட்டிகளில் இந்திய பேட்டிங் படை ஒட்டுமொத்தமாகப் பழைய ஃபார்முக்குத் திரும்பலாம் என பிசிசிஐ நம்புகிறது. என்றாலும் அது நிகழ்ந்திடுமா என்ற கேள்வி இருக்கவே செய்கிறது. விடை, இங்கிலாந்து தொடரிடம் உள்ளது. எது எப்படியோ கம்பீருக்கு உதவியாக பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஸு கோட்டாக்கிற்கு வேலை அதிகம் இருக்கும் என்பது மட்டும் சர்வ நிச்சயம்.
மொத்தத்தில் பார்த்துப் பார்த்து பிசிசிஐயால் புனையப்பட்டிருக்கும் பத்து விதிகளும் அற்புதம்தான். அதில் பெரும்பாலானவை ஏற்கெனவே வழக்கிலிருந்தாலும் மீண்டுமொருமுறை நினைவூட்டும் விதமாகக் கண்டிப்பு கலந்து அதனை வீரர்களுக்கு அனுப்பியதும் பாராட்டத்தக்கதுதான். இருப்பினும் இதே அதிரடியை இனிவரும் காலங்களில் பிசிசிஐ அணியைக் கட்டமைப்பது உள்ளிட்ட துணிவான நகர்வுகளை முன்னெடுப்பதிலும் காட்ட வேண்டும். இல்லையெனில் இந்த விதிகள் தோல்வியை மறைப்பதற்காகவும் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவுமான கண்துடைப்பு நடவடிக்கைதானோ என்ற சந்தேகமே கிளம்பும்!