ரஞ்சி போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா; விலகிய விராட் கோலி!
Karun Nair: ``என் கனவு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது; அது நடக்கும் வரை..'' -கம்பேக் கருண் நாயர்
கவுதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு மூன்று மோசமான தோல்விகளைக் கண்ட இந்திய அணி, அவரின் தலைமைப் பயிற்சியின் கீழ் முதல் ஐ.சி.சி தொடரில் விளையாடவுள்ளது. இதன் காரணமாக, ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் யார் யார் இடம்பிடிக்கப்போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சமயத்தில்தான், டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசியாக முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரரான கருண் நாயர், நடப்பு விஜய் ஹசாரே டிராபியில் 8 போட்டிகளில் 7 இன்னிங்ஸ்களில் 5 சதங்கள், ஒரு அரைசதம் உட்பட 752 ரன்கள் குவித்து, தேர்வுக் குழுவின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். கூடவே, சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் கருண் நாயரையும் ஏன் சேர்க்கக் கூடாது என்று பலரையும் முணுமுணுக்க வைத்திருக்கிறார். இந்த நிலையில், 2017-க்கு பிறகு அணியில் இடம்பிடிக்க முடியாமல் போராடிவரும் கருண் நாயர், தன்னுடைய இத்தகைய கம்பேக் குறித்தும், தனது கனவு குறித்தும் PTI ஊடகத்திடம் மனம் திறந்திருக்கிறார்.
என்னுடைய கனவு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது!
``நாட்டுக்காக விளையாடுவதே என் கனவு. அந்தக் கனவு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. அதற்காகத்தான் நாம் இந்த விளையாட்டை விளையாடுகிறோம். எனவே, நாட்டிற்காக விளையாடுவதே என்னுடைய ஒரே இலக்கு. இது என்னுடைய மூன்றாவது கம்பேக் என்று நினைக்கிறேன். இந்த நேரத்தில் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேனோ, அதை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
ஒவ்வொரு ஆட்டத்திலும் என்னால் முடிந்த ரன்களைக் குவிக்க வேண்டும். அது மட்டுமே என்னால் செய்ய முடியும். மற்ற எதுவும் என் கையில் இல்லை. எனவே, அணிக்கு நான் தேர்வாகும் வரை அது கனவாக மட்டுமே இருக்கும். ஆனாலும், நான் ஏற்கெனவே கூறியது போல, ஒரு நேரத்தில் ஒரு இன்னிங்ஸில் கவனம் செலுத்த விரும்புகிறேன். மற்றபடி நான் வித்தியாசமாக எதையும் செய்யவில்லை. இது பல வருட கடின உழைப்பு, விடாமுயற்சி என்று நான் நினைக்கிறேன். அது தவிர, இதில் எந்த ரகசியமும் இல்லை.
மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கினேன்!
மேலும், அச்ச உணர்வு எல்லோருக்குள்ளும் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், என்னுடைய கிரிக்கெட் முடிவுக்கு வரும் என்ற எண்ணம் எனக்கு இருந்ததில்லை. அது எங்கே செல்கிறது, நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன், இது எப்படி நடந்தது என்ற எண்ணங்கள் உண்டு. அதிலிருந்து நீங்கள் வெளியே வந்து, என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள சிறிது நேரம் எடுக்கும். அப்போது, மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்க வேண்டும் என்று எனக்குள் நான் சொல்லிக்கொண்டேன்.
எனக்கு நானே சில வருடங்கள் கொடுத்து, என்ன நடக்கிறது என்று பார்க்கலாம், அதன் பிறகு ஒரு முடிவெடுக்கலாம் என்பதே எனது செயல்முறையாக இருந்தது. மனரீதியாக அதுவொரு கடினமான சூழ்நிலை. இருப்பினும், என்னைப் பற்றியும், எனது கிரிக்கெட்டைப் பற்றியும் நிறைய விஷயங்களை அது எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. அதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இவை எதுவும் இல்லாமல், இப்போது இந்த நிலையில் நான் இருப்பேன் என்று நினைக்கவில்லை" என்று கருண் நாயர் கூறினார்.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...