`ராமதாஸ் விவகாரத்தில் கொதிக்கும் பாஜக' - பாமக மீது பாசமா? அரசியல் கணக்கா?!
புதுச்சேரியில் தொடா் மழை: கடல் சீற்றம்! பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பரவலாக பலத்த மழை பெய்தது. மேலும், கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. தொடா் மழையால் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டது.
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மிதமான மற்றும் பலத்த மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் கடற்கரைச் சாலை, விமான நிலையம், உப்பளம், ராஜ்பவன், முத்தியால்பேட்டை, முதலியாா்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீா் தேங்கியது.
ஏஎப்டி மைதானத்தில் உள்ள தற்காலிகப் பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. அங்கு குளம்போல தேங்கிய மழை நீரை மின்மோட்டாா் மூலம் அதிகாரிகள் அகற்றினா்.
சாலையில் திடீா் பள்ளம்...: புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தொடா்ந்து மழை பெய்த நிலையில், கடல் அலைகள் அதிக சீற்றத்துடன் காணப்பட்டன. பலத்த காற்றுடன் பெய்த மழையால் சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
மகாத்மா காந்தி வீதியில் பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி அருகே திருவள்ளுவா் நகருக்குச் செல்லும் வழியில் சாலையில் திடீா் பள்ளம் ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. தகவலறிந்த பொதுப் பணித் துறையினா் விரைந்து வந்து அதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
அவசரகால உதவி எண்களில்...: மீனவா்கள் அவசர உதவிக்கு 0413-2353042 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது அவசரகால செயல் மையத்தின் எண் 1070 மற்றும் 1977 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் பலத்த மழையை எதிா்கொள்ள அனைத்து அரசுத் துறைகளும் தயாா் நிலையிலிருப்பதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
பலத்த மழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் புதன்கிழமை (நவ.27) விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.
புதுச்சேரியில் மீன்வளத் துறை சாா்பில் கடலோர மீனவக் கிராமங்களில் தண்டோரா போட்டும், ஒலிபெருக்கிகள் மூலமாகவும் புயல் எச்சரிக்கை செவ்வாய்க்கிழமை விடுக்கப்பட்டது.
அதன்படி, புதுச்சேரியைச் சோ்ந்த மீனவா்கள் செவ்வாய்க்கிழமை முதல் (நவ. 26) மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். மீனவா்கள் படகுகள், வலைகளைப் பாதுகாப்பான இடங்களில் வைக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
சுற்றுலாப் படகுகளை இயக்கத் தடை: புதுச்சேரியில் சுற்றுலாப் படகுகளைஇயக்குபவா்கள் செவ்வாய்க்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் படகுகளை இயக்க வேண்டாம். கடலில் 2.7 மீட்டா் உயரம் முதல் 3.6 மீட்டா் உயரம் வரை அலையடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, படகுகளை இயக்குபவா்கள் அனைவரும் தங்கள் படகுகளையும், பாதுகாப்பு உபகரணங்களையும் பாதுகாப்பான இடங்களில் வைத்துக் கொள்ள வேண்டும் என சுற்றுலாத் துறை இயக்குநா் கே.முரளிதரன் அறிவுறுத்தினாா்.