'16 நாட்களுக்குப் பின் வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த்; விஜய்யுடன் முக்கிய மீட்டிங்!' ...
புதுச்சேரி: இந்திரா – ராஜீவ் காந்தி சதுக்கம் இடையே ரூ.436 கோடியில் மேம்பாலம்! - எப்போது முடியும்?
`30 ஆண்டுகளுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாது...’
சுற்றுலா மாநிலமான புதுச்சேரிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வார இறுதி நாட்களில் மட்டுமே சுற்றுலாப் பயணிகளின் வருகை இருக்கும். ஆனால் சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக, புதுச்சேரி சுற்றுலாத்துறை பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை செய்து வருகிறது.
அதன் காரணமாக வார இறுதி நாட்கள் மட்டுமல்லாமல், மற்ற நாட்களிலும் அயல் மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியை நோக்கிப் படையெடுக்கின்றனர். அதன் காரணமாக நகரப் பகுதி முழுவதும் நாள்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.
அதனால் புதுச்சேரியின் முக்கிய சந்திப்புகளான இந்திரா – ராஜீவ் காந்தி சதுக்கங்களுக்கு இடையே 3.877 கிலோமீட்டர் நீளத்துக்கு, உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு ரூ.436.18 கோடி மதிப்பீட்டில் கோப்பு தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை கடந்த மாதம் ஒப்புதல் அளித்த நிலையில், அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
மத்திய அமைச்சர் நிதி கட்காரி கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தி சதுக்கம் முதல் காலாப்பட்டு வரை 13.63 கிலோமீட்டருக்கு ரூ.25.04 கோடியில் ஈ.சி.ஆர் சாலை மேம்பாட்டுப் பணி, புதுச்சேரி – பூண்டியாங்குப்பம் இடையே ரூ.1,588 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட நான்கு வழிச் சாலையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், ``இந்தப் பாலம் கட்டுவதற்கான முழு நிதியையும் மானியமாக அளித்திருக்கும் மத்திய அரசுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பாலம் கட்டுவதன் மூலம், அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது.
`ரூ.3,000 கோடியில் உள்கட்டமைப்புப் பணிகள்’
கடந்த ஆட்சியில் 5 ஆண்டுகளில் ரூ.1,070 கோடியில்தான் உள்கட்டமைப்புப் பணிகள் செய்யப்பட்டன. ஆனால் எங்கள் அரசில் தற்போது வரை ரூ.2,400 கோடிக்கு உள்கட்டமைப்புப் பணிகள் முடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த மேம்பாலப் பணியையும் சேர்த்தால் ரூ.3,000 கோடியைத் தாண்டும். யாரும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, ``புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணம்.
பெரிய வளர்ச்சி வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது இயற்கை. புதுச்சேரியில் தற்போதிருக்கும் சாலைகள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குறுகிய சாலைகள். அதனால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அதனால் சாலைகளை மேம்படுத்துவதில் எங்கள் அரசு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த ஆட்சியில் இப்படியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை.
மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கும் இந்த உயர்மட்ட மேம்பாலத்திற்கு, விரைவில் டெண்டர் விட்டு பணியை துவக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். இந்திராகாந்தி சதுக்கத்திலிருந்து மரப்பாலம் வரையிலும், அங்கிருந்து முள்ளோடை வரையிலும் மேம்பாலம் அமைக்கும் பணியையும் துவங்க வேண்டும். அதற்கான நிதியையும் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வழங்க வேண்டும்” என்றார்.
இறுதியாகப் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, ``நம் பிரதமர் மோடி 2014-ல் பதவியேற்றவுடன் உள்கட்டமைப்புக்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்தார்.
மேம்பாலம் எப்படி அமைகிறது... எப்போது முடிகிறது ?
அதனால் நம் நாட்டின் நெடுஞ்சாலை இணைப்பு உலகளவில் முதலிடத்தில் இருக்கிறது. நாடு முழுவதிலும் உள்ள நகராட்சிகளில் உருவாகும் குப்பைகளை மறுசுழற்சி செய்து, அதன் மூலம் சாலைகள் போடுவதற்கு முடிவெடுத்திருக்கிறோம்.
மேலும் புதுச்சேரி நடேசன் நகரில் இருந்து மரப்பாலம் வரை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழி மேம்பாலமும், அரியாங்குப்பத்தில் இருந்து முள்ளோடை சந்திப்பு வரை 13.5 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச் சாலையும் ரூ.650 கோடியில் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படும்.
நடேசன் நகரில் இருந்து முள்ளோடை வரையிலான புதிய சாலை வழித்தடத்துக்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் அதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். மேலும் மரக்காணம் முதல் புதுச்சேரி வரையிலான நெடுஞ்சாலையை நான்கு வழிப் பாதையாக மாற்றுவதற்கு, ரூ.2,200 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டிருக்கிறது” என்றார்.

இந்திரா காந்தி - ராஜீவ் காந்தி சதுக்கம் வரை 3.877 கிலோமீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பாலம் இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரை 1,150 மீட்டர் நீளத்திலும், இந்திரா காந்தி சதுக்கம் முதல் கடலூர் சாலையில் (100 அடி சாலை) 430 மீட்டர் நீளத்திலும், இந்திரா காந்தி சதுக்கம் முதல் விழுப்புரம் சாலையில் 300 மீட்டர் நீளத்திலும், இந்திரா காந்தி சதுக்கம் முதல் புதிய பேருந்து நிலையம் வரை 853 மீட்டர் நீளத்திலும் அமைய இருக்கிறது.
அதேபோல ராஜீவ் காந்தி சதுக்கம் முதல் ஈ.சி.ஆர் சாலையில் 620 மீட்டர் நீளத்திலும், ராஜீவ் காந்தி. சதுக்கம் முதல் திண்டிவனம் சாலையில் 524 மீட்டர் நீளத்திலும் அமைய இருக்கிறது.
டெண்டர் நடைமுறைக்குப் பிறகு 2025 டிசம்பம்பர் மாத இறுதிக்குள் தொடங்க இருக்கும் இந்தப் பணி, 30 மாதங்களில் முடிவடையும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன்படி 2028 இறுதிக்குள் இந்தப் பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.