திருச்செந்தூர் கோவில் தக்கார் பதவி நீக்கம்! - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவி...
"ஜெயலலிதா இருந்தால் இப்படி பேச முடியுமா?" - சி.வி.சண்முகத்துக்கு கீதா ஜீவன் கண்டனம்!
முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி சண்முகம் பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பெண்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்களைக் கூறியதாக கண்டனம் தெரிவித்துள்ளார் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன்.
கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
"அரசின் இலவசத் திட்டங்களோடு பெண்களையும் ஒப்பிட்டு, அருவருக்கத்தக்கக் கருத்தை வெளியிட்டிருக்கிறார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம். அதிமுக பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், ”தேர்தலுக்குப் பல அறிவிப்புகள் வரும். இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு மனைவியையும் கூட இலவசமாக வழங்குவார்கள்” என மிகக் கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார்.
திராவிட மாடல் அரசு மக்களின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி... பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகிறது.
‘’பொண்டாட்டிகளையும் இலவசமாகத் தருவார்கள்’’ எனப் பெண்களை இலவசத்தோடு ஒப்பிட்டுக் கொச்சைப்படுத்தியிருக்கிறார் சி.வி.சண்முகம். அதிமுகவுக்குப் பெண்கள் மீது இருக்கும் வக்கிரமும் வன்மமும் வெளிப்பட்டிருக்கிறது. ஓர் அரசியல்வாதியாக அல்ல. அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம்.
ஜெயலலிதா இருக்கும் போது சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியுமா? அவரை இருக்கும் இடம் தெரியாமல் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. ஆளுமை இல்லாத எடப்பாடி பழனிசாமி ஒரு கண்டிப்பைக்கூடச் செய்யவில்லை. பழனிசாமி வீட்டிலும் பெண்கள் இருக்கத்தானே செய்வார்கள். அவர்களுக்கும் சேர்த்துதானே சேற்றை வாரி வீசியிருக்கிறார் சி.வி.சண்முகம். அந்த சொரணைகூட பழனிசாமிக்கு இருக்காதா? ஒருவர் அடிமையாய் மாறிவிட்டால், அவரிடம் ஆளுமையும் சூடு சொரணையும் எப்படி இருக்கும்? உங்கள் வீட்டுப் பெண்கள் எல்லாம் உங்களைப் பார்த்து என்ன நினைப்பார்கள்?
பெண்கள் பயணம் செய்யும் மகளிர் விடியல் பயணப் பேருந்துகளை லிப் ஸ்டிக் பூசிய பேருந்துகள் எனக் கேவலமாகப் பேசியவர்தானே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அவரின் அடிவருடி சி.வி.சண்முகத்தின் நாக்கில் நாராசம்தானே வரும்.
தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கும் தொகையைப் பிச்சை போடுவதாகச் சொல்லி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களை நடிகை குஷ்பு கொஞ்ச நாட்கள் முன்பு இழிவுபடுத்தினார். பாமகவின் சவுமியா அன்புமணி, ‘’உங்க 1000 ரூபாய் யாருக்கு வேணும்?’’ எனக் கேவலமாகப் பேசினார்.
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனோ அரசு வழங்கும் நிவாரணத் தொகையைக் கேலி செய்தார். "வெள்ளம் வந்தால், வீடு இடிந்து விழுந்தால் ₹500, 1000 எனத் தருகிறார்கள். இத்தகைய நடவடிக்கையால் நாடு முன்னேறாது. எப்போது பார்த்தாலும் இன்னொருவர் போடும் பிச்சையில் நாம் வாழத் தேவையில்லை" என்று சொன்னார். இவர்களின் குணமும் நிறமும் ஒன்றுதான். இவர்கள் ஒன்றாகக் கூட்டணி சேர்ந்து திமுகவை எதிர்க்கவில்லை. ஒட்டுமொத்தப் பெண்களையே அழிக்கக் கைகோர்த்திருக்கிறார்கள்.
மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் போன்ற பொருளாதாரத் தன்னிறைவு திட்டங்களால் பெண்கள் முன்னேறி வருகிறார்கள். அது அதிமுகவுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் பெண் இனத்தைக் குறிக்கும் வகையில் ’பொண்டாட்டி இலவசம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கெட்ட வார்த்தைகளில் திட்டுவதற்குக் கூட பெண் இனத்தைப் பயன்படுத்தும் கேடு கெட்டவர் சி.வி.சண்முகம்...
பெண்களை அவதூறாகப் பேசிய அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இழந்த வரலாறு நிறைய உண்டு. பெண்களை இழிவுபடுத்தி வரும் அதிமுக-வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் தக்கப் பதிலடிக் கொடுத்து பாடம் புகட்டுவார்கள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.