`வெறுப்பு அரசியலை வென்ற ஹாக்கி' - Hi-Fi செய்து கொண்ட இந்தியா - பாகிஸ்தான் வீரர்க...
ஹரியானா: "சாதிய ஒடுக்குமுறையால் உயிரை மாய்த்துக்கொண்ட IPS அதிகாரி" - காங்கிரஸ் கண்டனம்!
ஹரியானாவில் கூடுதல் டி.ஜி.பியாக பணியாற்றி வந்த ஒய். பூரன் குமார் என்ற அதிகாரி தனது துப்பாக்கியாலேயே சுட்டுத் தற்கொலை செய்துள்ள சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் அவரைத் தொடர்ந்து சந்தீப் குமார் என்ற மற்றொரு அதிகாரியும் தற்கொலை செய்ததுடன், பூரன் குமார் ஒரு ஊழல் அதிகாரி என்று தற்கொலை கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்கள் காவல்துறையை உலுக்கியிருக்கும் சூழலில், பூரன் குமார் மரணத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை.
அவரது அறிக்கையில், "பா.ஜ.க. ஆட்சி செய்து வரும் ஹரியானா மாநிலத்தில், சாதிய அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கும், பணியிடத்தில் ஏற்படும் அவமதிப்பிற்கும் ஆளாகி மன உளைச்சலுடன் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ள இளம் ஐ.பி.எஸ் அதிகாரி திரு. பூரண் குமார் அவர்களின் துயரமான மரணம், நமது நாட்டில் ஜனநாயகமும் மனிதநேயமும் எவ்வளவு ஆழமான பாதிப்பில் இருக்கிறது என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது.
அவரை தற்கொலை செய்யும் அளவிற்கு தூண்டியவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

ஒரு காவல்துறையில் உயர்ந்த இடத்தில் உள்ள ஒரு அதிகாரி கூட, சாதிய பாகுபாட்டினால் தன் உயிரை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது, ஹரியானா அரசின் தோல்வி மட்டுமல்ல, ஒட்டுமொத்த பா.ஜ.க. ஆட்சியின் முழுமையான தோல்வியாகும்.
இந்த அரசின் ஆட்சி இயந்திரம் முழுவதும் அநியாயம், ஒடுக்குமுறை, பாகுபாடு, வெறுப்பு ஆகியவற்றில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த துயர சம்பவம் நிரூபிக்கிறது." எனக் கூறியுள்ளார்.
அத்துடன் காங்கிரஸ் தலைவர்களின் கண்டத்தையும் பதிவு செய்துள்ளார் செல்வப்பெருந்தகை.
அவரது அறிக்கையில், "இதுபோன்ற சாதி வெறி ஆட்சி நிலவுவதற்கு மௌனமாக இருக்க முடியாது எனக் கூறி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. மல்லிகார்ஜுனா கார்கே அவர்கள், 'ஒரு அதிகாரி தன் கடமையின்போது சாதிய அவமதிப்பால் தற்கொலை செய்ய நேரிட்டது, 'பாசிச ஆட்சியின் முகமூடி கிழிந்த தருணம் ' என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதேபோல், திருமதி சோனியா காந்தி அவர்கள் தனது ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தி, 'இந்த நாட்டில் சாதிய அடிப்படையில் இன்னும் உயிர்கள் மாய்கின்றன என்ற உண்மை நம்மை வெட்கப்பட வைக்கிறது. இத்தகைய பாசிச சூழ்நிலைகள் முடிவடைய மக்கள் எழுந்து குரல் கொடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமதி பிரியங்கா காந்தி அவர்களும் தமது அறிக்கையில், 'ஒரு இளம் அதிகாரியின் உயிர் சாதிய வெறியின் பலியாக மாறியிருக்கிறது. இது அரசின் பொறுப்பின்மையின் விளைவு. அந்த அதிகாரி குடும்பத்துக்கு நீதியும் நியாயமும் கிடைக்க வேண்டும்' எனக் கூறி, குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று, மக்கள் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் நேரடியாக ஹரியானா மாநிலத்துக்கு சென்று, தற்கொலை செய்துக் கொண்ட ஐபிஎஸ் அதிகாரி திரு. பூரண் குமார் அவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியிருப்பது, காங்கிரஸ் கட்சியின் மனிதநேயம், அன்பு, சமத்துவம் மற்றும் நீதி மீதான உறுதியான நம்பிக்கையின் எடுத்துக்காட்டாகும். அவர் குடும்பத்துக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, 'இந்தியாவில் இனிமேல் எந்த ஒருவரும் சாதி அவமதிப்பால் உயிரிழக்கக் கூடாது' என வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் ஹரியானா மட்டுமல்ல; இந்தியாவின் ஆன்மாவை உலுக்கும் ஒன்று. சாதி, மத, மொழி பாகுபாடு இல்லா சமத்துவ இந்தியாவுக்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் உறுதியாக தெரிவிக்கிறேன்." எனக் கூறியுள்ளார்.