`வெறுப்பு அரசியலை வென்ற ஹாக்கி' - Hi-Fi செய்து கொண்ட இந்தியா - பாகிஸ்தான் வீரர்க...
காஸா போர் நிறுத்தம்: ட்ரம்ப் மட்டுமே உரிமைகோர முடியுமா? - இந்த நாடுகளின் பங்களிப்பு பற்றி தெரியுமா?
காஸாவுக்கான அமைதித் திட்டம் என ட்ரம்ப் 20 அம்ச திட்டத்தை வகுத்து அறிவித்தார். பெரும்பாலும் இஸ்ரேலுக்கே சாதகமாக இருந்த அந்த ஒப்பந்தத்துக்கு ஹமாஸும், இஸ்ரேலும் ஒப்புக் கொண்டன. காஸாவில் தாக்குதல் நின்றது. இஸ்ரேல் பணையக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது, பதிலுக்கு பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது. காஸா மீது இஸ்ரேல் நடத்திவந்த போர் முடிவுக்கு வர நான்தான் காரணம், இது நான் நிறுத்திய 8-வது போர் ( இந்தியா - பாகிஸ்தான் போர் உட்பட) என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வழக்கம்போல் சுய புகழ்ச்சி பேசிக் கொண்டிருக்கிறார். இஸ்ரேலும், பாகிஸ்தானும் அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என தங்கள் விஸ்வாசத்தை காட்டி வருகின்றன. ஆனால், உண்மையில் ட்ரம்ப் ஒருவரால்தான் இந்த போர் முடிவுக்கு வந்ததா? ட்ரம்ப் மட்டுமே இதற்கு உரிமை கோர முடியுமா? அமெரிக்காவைத் தாண்டி இந்த போர் முடிவுக்கு வருவதற்கு மிக முக்கியப் பங்காற்றிய நாடுகள் எவை என்பதை விரிவாக பார்க்கலாம்!
1. கத்தார்:
இஸ்ரேல் - காஸா போர் தொடங்கிய காலத்திலிருந்தே சமரசத்துக்கான முயற்சியில் ஒரு சார்பற்ற நாடாக ஈடுபட்டது கத்தார். ஹமாஸ் - இஸ்ரேல் படைகள் பேச்சு வார்த்தைக்கு தங்கள் நாட்டில் இடமளித்து மத்தியஸ்தம் செய்திருக்கிறது. ஒருவகையில் பார்த்தால் கத்தாரின் செயல்பாட்டை காந்தியின் சத்தியா கிரகத்தோடு ஒப்பிடலாம். ஏனெனில், செப்டம்பர் மாதம் ஹமாஸ் தலைவர்கள் பேச்சு வார்த்தைக்காக கத்தார் சென்றிருந்தனர். பேச்சு வார்த்தையை சீர்குலைக்கும் நோக்கில், ஹமாஸ் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். அந்த தாக்குதல் நடக்காமல் இருந்திருந்தால், அப்போதே ஹமாஸ், கத்தார் கொடுத்த அழுத்தத்தின்படி அமெரிக்கா கூறும் விதிகளை ஏற்று அமைதி பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டிருக்கும். கத்தாரின் பேச்சுக்கு ஹமாஸ் அவ்வளவு மதிப்பளித்தது. ஆனால், இஸ்ரேல் தாக்குதலால், அமைதிக்கான வாய்ப்பு தகர்ந்தது.
தங்கள் நாட்டின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கத்தார் கண்டனம் தெரிவித்ததே தவிர, தங்கள் இறையாண்மை மீது தாக்குதல் நடத்திய காரணத்துக்காக எந்த பதிலடி தாக்குதலையும் இஸ்ரேல் மீது கத்தார் நடத்தவில்லை. அப்படி நடத்தியிருந்தால், மத்திய கிழக்கில் இன்னும் மோசமான பின் விளைவுகள் ஏற்பட்டிருக்கும். ஆனால், அதை பக்குவமாக கையாண்டது கத்தார். அரபு, இஸ்லாமிய நாடுகளின் கூட்டத்தை உடனடியாக கூட்டி, இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்தது. இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்தது. அதன் விளைவு, ஐநா பொதுச் சபை வருடாந்திரக் கூட்டத்தின்போது, அரபு நாடுகள் ட்ரம்ப்பை சந்தித்து போர் நிறுத்தம் குறித்து அழுத்தம் தெரிவித்தன. அமெரிக்காவுக்கு மிக முக்கிய முதலீடுகளைக் கொடுக்கும், அரபு நாடுகளின் பேச்சை ட்ரம்ப்பால் உதாசீனப்படுத்த முடியாது என்பதாலேயே, அவர் அமைதித் திட்டத்தை உருவாக்க நேர்ந்தது.
இதற்கு முன்பு ஜனவரி 2025-ல், ஹமாஸ் - இஸ்ரேல் இடையே ஏற்பட்ட தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திலும், கத்தார் முக்கியப் பங்காற்றியது. எனவே கத்தாருக்கு இந்த போர் முடிவுக்கு வந்ததில் மிக முக்கியப் பங்கு இருக்கிறது.
2. பிரான்ஸ்:
ஐரோப்பாவில் பிரான்ஸின் பேச்சுக்கு பெரும் செல்வாக்கு இருக்கிறது. அவர்கள் எடுக்கும் முடிவு, அவர்கள் வைக்கும் கருத்து அரசியலில் தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. அந்த அடிப்படையில் பிரான்ஸின் தலையீடு காஸாவில் போரை முடிவுக்கு கொண்டு வர ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.
ஹமாஸின் 2023 அக்டோபர் 7 தாக்குதலை பிரான்ஸ் கண்டித்திருந்தது. இன்னும் சொல்லப்போனால், பிரான்ஸைச் சேர்ந்தவர்களும் அந்தத் தாக்குதலில் உயிரிழந்திருந்தனர். முதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரான்ஸ் இருந்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் இஸ்ரேல் காஸாவில் நிகழ்த்திய அட்டூழியங்கள் ஏற்புடையதல்ல என வெளிப்படையாக பேசினார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான். காஸாவுக்கு உணவுப் பொருட்களை அனுமதிக்காமல், பட்டினியை ஒரு ஆயுதமாக இஸ்ரேல் கையில் எடுத்ததை அவர் கண்டித்தார். சர்வதேச நாடுகள் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மனித உரிமை மீறலை நிறுத்தவில்லை என்றால், இஸ்ரேல் மீது தடைகள் விதிக்க நேரிடும் எனவும் எச்சரித்தார். எவ்வளவு சொல்லியும் இஸ்ரேல் கேட்காததால், 2 முக்கிய விஷயங்களைச் செய்தார் மேக்ரான்.
1) நியூயார்க் தீர்மானம் (The Newyork Declaration) - சவுதி அரேபியாவுடன் இணைந்து ஐநா சபையில், ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது பிரான்ஸ். அதில், காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், பாலஸ்தீனத்தில் இரட்டை அரசாங்க முறை அமல்படுத்த வேண்டும் என இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 142 நாடுகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது. இது அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் கொடுக்கப்பட்ட முதல் அழுத்தம்.
2) பாலஸ்தீனத்துக்கான அங்கீகாரம்: ஹமாஸ் நடத்தியது கொடூரத் தாக்குதல்தான். அது கண்டிக்கத்தக்கதுதான். ஆனால், அதற்காக காஸாவில் இஸ்ரேல் செய்து கொண்டிருப்பதை எந்த காரணத்தை சொல்லியும் நியாயப்படுத்த முடியாது என ஐநா வருடாந்திர சிறப்பு பொதுச் சபைக் கூட்டத்தில் பேசினார் மேக்ரான். போரை நிறுத்துவதற்கும், நீடித்த அமைதி திரும்புவதற்கும் ஏதுவாக, பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக மேக்ரான் அறிவித்தார். இது இரண்டாவது அழுத்தம். பிரான்ஸுக்கு முன்பே பிரிட்டன் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக தெரிவித்திருந்தாலும், அதில் பிரான்ஸ் உருவாக்கிய கருத்தின் தாக்கம் இருக்கிறது. மற்றொரு புறம் இதைத்தாண்டி பெரிய அழுத்தத்தையோ, பங்களிப்பையோ பிரிட்டன் கொடுக்கவில்லை.
அந்த வகையில், திக்கற்று இருந்த இந்த போரை முடிவை நோக்கி திசை திருப்பியதில், பிரான்ஸின் பங்கு மிக முக்கியமானது.
3. எகிப்து
காஸா போருக்கான இறுதி அமைதி பேச்சுவார்த்தை எகிப்தில்தான் நடந்து முடிந்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மற்ற உலக நாடுகள் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும் எகிப்தில்தான். மார்ச் 2025-ல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், காஸா மக்களை வெளியேற்றிவிட்டு அதை ஒரு தொழில் நகரமாக உருவாக்குவோம் என அறிவித்தார். அதற்கு எதிர்ப்பு மட்டும் தெரிவிக்காமல் செயலிலும் இறங்கியது எகிப்து. காஸாவை மீட்டுருவாக்கம் செய்வதற்கான பிளானை, ப்ளூபிரிண்டாகவே உருவாக்கி அரபு, இஸ்லாமிய நாடுகள் கூட்டத்தில் சமர்ப்பித்த முதல் நாடு எகிப்து. காஸாவினுடைய போர், எல்லை நாடான எகிப்துக்கும் பரவிவிடக் கூடாது என்பதிலும், காஸாவிலிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு எகிப்தில் இடம் கொடுக்க முடியாது என்ற தன்னலமும் எகிப்தை இந்த முடிவெடுக்க வைத்தது. ராபா எல்லை வழியாக காஸாவுக்கு உணவு மற்றும் உதவிகளையும் எகிப்து வழங்கியது. ஒட்டுமொத்தமாக, தன்னலம் இருந்தாலும் அதில் பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்ற பொது நலமும், காஸா போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்தி பங்காற்ற வைத்திருக்கிறது.
4. துருக்கி
இந்த அமைதிப் பேச்சு வார்த்தையின் கடைசி மற்றும் முக்கியமான கட்டம் நிறைவேறியதற்கு துருக்கிதான் முழு முதற் காரணம். துருக்கி அதிபர் எர்டோகன், செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். இரு நாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. அப்போது, ட்ரம்ப், துருக்கி அதிபர் எர்டோகனிடம் ஒரு கோரிக்கை வைத்தார். துருக்கியின் பேச்சுக்கு ஹமாஸ் மதிப்பளிக்கும் என்பதால், ஹமாஸை போர் நிறுத்தத்துக்கு, ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும் என்றார் ட்ரம்ப். இதை எர்டோகன் ஏற்று, ஹமாஸிடம் பேசி அவர்களை போர் நிறுத்தத்துக்காக ட்ரம்ப் போட்ட அமைதித் திட்டத்துக்கு ஒப்புக் கொள்ள வைத்ததில் முக்கிய பங்கு எர்டோகனுக்கு இருக்கிறது.
இதை செய்வதால் அவருக்கு என்ன லாபம். 2019-க்கு பிறகு அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவு விரிசலைடந்தது. அதை சரி செய்யும் வகையில் 5 ஆண்டுகளுக்கு பிறக்கு துருக்கி அதிபர் எர்டேகான் அமெரிக்காவுக்கு சென்றார். அது உள்நாட்டில் அவரது இமேஜை தக்க வைக்க உதவியது. மேலும், மத்திய கிழக்கில் துருக்கிக்கு இருக்கும் செல்வாக்கை அதிகரிக்கவும், ஹமாஸின் ஒப்புதல் உதவும். இதைத் தாண்டி காஸாவில் உயிரிழப்புகளை நிறுத்த வேண்டும் என்ற அக்கறையும் இருக்கிறது. இதெல்லாம்தான், எர்டேகானை, ஹமாஸிடம் பேச வைக்கிறது.
இன்னும் பல நாடுகள் சின்னச் சின்ன பங்காற்றியிருக்கின்றன. இப்படி பல்வேறு நாடுகளின் பங்களிப்பால்தான், காஸாவில் போர் முடிவுக்கு வந்தது. ட்ரம்ப்பால் மட்டும் இந்த அமைதியை கொண்டு வந்திருக்க முடியாது. ஒருபுறம் இஸ்ரேலுக்கு ஆயுதம் கொடுத்து, குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட காரணமாக இருந்த ட்ரம்ப், அமைதிக்கான நோபல் பரிசு கேட்பதுதான் இந்த யுகத்தின் மிகப்பெரிய ஜோக்!