திருச்செந்தூர் கோவில் தக்கார் பதவி நீக்கம்! - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவி...
`ஏடிஎம் இயந்திரத்தில் பல மடங்கு லாபம்'- பிரபலங்களை வைத்து `பலே' மோசடி; கோவையில் மீண்டும் அதிர்ச்சி!
கொங்கு மண்டலத்தில் நூதன முறையில் பல்வேறு மோசடிகள் நடப்பது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு ‘ZPE ATM’ எனும் நிறுவனம் இயங்கி வருகிறது. இவர்கள் ஃபிரான்சைஸ் (Franchise) முறையில் ஏடிஎம் இயந்திரம் குறித்து சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்துள்ளனர்.

அதைப் பார்த்து தமிழ்நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் அவர்களை தொடர்பு கொண்டுள்ளனர். “நாங்கள் வழங்கும் இயந்திரத்தில் வங்கி டெபிட் கார்டுகளை கொண்டும் பணம் எடுக்கலாம்,
மேலும் ஜிபே உள்ளிட்ட யுபிஐ மூலம் செலுத்தியும் பணமாக எடுக்கலாம். முதலீடுக்கு ஏற்றார் போல லாபம் கிடைக்கும். ஏடிஎம் இயந்திரத்தில் ஒவ்வொரு முறை பண பரிவர்த்தனை செய்யும்போதும் கமிஷன் கிடைக்கும்.” என்று கூறியுள்ளனர். அதை நம்பி 100க்கும் மேற்பட்டார் சுமார் 50,000 தொடங்கி பல லட்ச ரூபாய்களில் முதலீடு செய்துள்ளனர்.

அதன் பிறகு தான் பிரச்னை எழுந்துள்ளது. அந்த நிறுவனம், “முதலீடு செய்த 45 நாள்களில் இயந்திரம் ஒப்படைக்கப்படும். பணத்தையும் நாங்களே நிரப்பிவிடுவோம்.” என்று கூறியுள்ளனர்.
அதன்படி முதலீடு செய்த சிலருக்கு ஏடிஎம் இயந்திரங்களை வழங்கியுள்ளனர். அவர்களுக்கு சில நாள்கள் மட்டுமே ஏடிஎம் வேலை செய்துள்ளது. பலருக்கு இயந்திரம் வேலை செய்யவில்லை. இதுகுறித்து அந்த நிறுவனத்திடம் பலமுறை கேட்டும் முறையான பதில் இல்லை. “பிரபலமானவர்களை எல்லாம் வைத்து விளம்பரம் செய்தனர்.

அதை நம்பி முதலீடு செய்தோம். இப்போது ஏமாற்றிவிட்டார்கள்.” என்று பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.