`என்னை டார்கெட் பண்ணுங்க, ஆனா அந்த 23 வயது குழந்தையை விட்ருங்க’- ஹர்ஷித் ராணாவுக...
இருமல் மருந்து உயிரிழப்பு: தமிழக அரசு அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகளின் வீடுகள் உட்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (அக்.13) சோதனை நடத்தியிருக்கின்றனர்.
ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் இருமல் மருந்தை உட்கொண்ட மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 22 குழந்தைகள் உயிரிழந்தனர்.
இந்த விவகாரம் இந்தியாவையே அதிரச்சியடையச் செய்தது. இந்த நிலையில், இருமல் மருந்து ஏற்றுமதி செய்ததில் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் நடந்திருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனம், அதன் உரிமையாளர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்புடைய 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
இதற்கிடையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.
கோடம்பாக்கத்தில் உள்ள ரங்கநாதன் வீட்டிற்கு நேற்று 2 வாகனங்களில் வந்த 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறையிடம் முறையாக முன் அனுமதி வாங்காமல் பல்வேறு மாநிலங்களுக்கு ‘கோல்ட்ரிஃப்’ மருந்துகள் ஏற்றுமதி செய்ததற்கான ஆவணங்கள், நிறுவனத்தின் வங்கி கணக்கு விபரங்கள் என வழக்கு தொடர்பான பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
அதேபோல், நேரில் சோதனை நடத்தாமல், மருந்து நிறுவனத்திற்கு தடையில்லா சான்று வழங்கியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட தமிழக மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் தீபா ஜோசப் வீடு, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இணை இயக்குநர் கார்த்திகேயன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவன வங்கி கணக்கில் இருந்து பல லட்சம் ரூபாய் தீபா ஜோசப் மற்றும் கார்த்திகேயன் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட இரண்டு அதிகாரிகள் மீதும் லஞ்சம் பெற்றதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையின் இடையே கடந்த வியாழக்கிழமை கைது செய்து மத்தியப் பிரதேசத்திற்கு அழைத்து செல்லப்பட்ட மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை நேற்று மருந்து தயாரித்த தொழிற்சாலைக்கு நேரில் அழைத்து வந்தது மத்தியப் பிரதேச காவல்துறை.
அங்கு ரங்கநாதன் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு விசாரணைக்குட்படுத்தப்பட்டார். இந்த விசாரணை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது.