விடுவிக்கப்பட்ட Hostages: உற்சாகத்தில் Israel - Netanyahu வைக்கும் Suspense | De...
விருதுநகர்: தீயணைப்புத் துறையினர் Gpay-ல் தீபாவளி வசூல்; லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கியது எப்படி?
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஏழு நாட்களே உள்ள நிலையில் பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் தீயணைப்பு நிலையத்தில் தீபாவளி வசூலில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்குக் கிடைத்த புகாரின் பேரில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கணக்கில் வராத ரூ. 59 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தீயணைப்புத் துறை குடியிருப்பு வளாகத்திற்கு முன் காத்திருந்தனர்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஹரிச்சந்திரன் மற்றும் நவநீதகிருஷ்ணன் ஆகியோரை சோதனை செய்ததில் யார் யாரிடம் எவ்வளவு வசூல் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல்களைக் கொண்ட டைரி சிக்கியது.
மேலும் 59 ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்பு விசாரணையில் பட்டாசு கடைகள், தொழிற்சாலைகள், ஜவுளி கடைகள், பலசரக்கு கடைகள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களில் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த ஹரிச்சந்திரன், நவநீத கிருஷ்ணன், வினோத் ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது.

பின்னர் தீயணைப்பு நிலையத்தில் வைத்து விசாரணை செய்ததில் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி முதல் வசூலில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் டைரியைச் சோதனை செய்ததில் தீபாவளி இனமாக வசூலித்த 4,38,500 ரூபாயில், 59,500 ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்தது தெரியவந்தது. லஞ்சப் பணத்தை நேரடியாக ஜிபே மூலம் வங்கி கணக்குகளிலும் பெற்றது லஞ்ச ஒழிப்புத்துறையினர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
வசூல் செய்த மீதிப் பணமான 3 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயை வினோத் என்பவரின் வங்கிக் கணக்கில் செலுத்தியதும், மொத்தமாக வசூல் செய்த பின்னர் தீயணைப்பு நிலையத்தில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்து வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
லஞ்சம் வாங்குவதே பெரிய குற்றம் அதையும் தைரியமாக வங்கிக் கணக்கில் வாங்கி இருப்பது பேசுபொருளாக அமைந்துள்ளது.