"ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு செய்யவில்லை" - அன்புமணி குற்றச்சாட்...
ஊட்டி: எம்.எல்.ஏ அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் சொத்து மீட்பு கூட்டம் - சர்ச்சையில் கே.வி.தங்கபாலு
நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு வருகைத் தந்திருந்த காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவரும் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான கே.வி.தங்கபாலு, கட்சி நிர்வாகிகள் பலருடன் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் சொத்து மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான இந்த கூட்டம் அரசு கட்டடமான ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடத்தியிருக்கிறார்கள். அங்கேயே செய்தியாளர் சந்திப்பையும் நடத்தியிருக்கிறார்கள். இந்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து குற்றச்சாட்டை முன்வைக்கும் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் சிலர், " எம்.எல்.ஏ அலுவலகம் என்பது குறிப்பிட்ட அந்த சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மக்கள் எம்.எல்.ஏ - வைச் சந்தித்து தங்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் முறையிடும் இடமாகும். அந்த நோக்கத்திற்காக மட்டுமே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இயங்கி வருகிறது.
மக்கள் பிரதிநிதியான எம்.எல்.ஏ - விற்கும் தொகுதி மக்களுக்குமான பொதுவான இந்த அரசு கட்டடத்தில் கட்சி கூட்டத்தை நடத்தியிருப்பது மிகப்பெரிய அதிகார துஷ்பிரயோகம்.
கேள்வி கேட்க யாருமில்லை என்ற காரணத்தால் காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த நிர்வாகியும் அரசுத்துறை மற்றும் அரசியல் அனுபவம் வாய்ந்தவரான கே.வி தங்கபாலுவிற்கு இது தெரியாதா. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கட்சி கூட்டத்தை நடத்தியதற்கு முறையான விளக்கத்தை அவர்கள் தர வேண்டும்" என்றனர்.

காங்கிரஸ் கட்சியின் நீலகிரி மாவட்ட தலைவரும் ஊட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான கணோஷ் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர்களின் ஒருவரான மஞ்சூர் நாகராஜை தொடர்புகொண்டு கேள்வி எழுப்பினோம், "கட்சி கூட்டம் காங்கிரஸ் அலுவலகத்தில் தான் நடைபெற்றது. கழிவறையை பயன்படுத்த எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு வருகைத் தந்திருந்த நிர்வாகி தங்கபாலு அவர்கள், இங்கு வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். மற்றபடி எதுவுமில்லை" என முடித்துக்கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.வி. தங்கபாலு எம்.எல்.ஏ அலுவகத்தில் கட்சி கூட்டத்தை நடத்திய விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.