`வெறுப்பு அரசியலை வென்ற ஹாக்கி' - Hi-Fi செய்து கொண்ட இந்தியா - பாகிஸ்தான் வீரர்க...
திருச்செந்தூர் கோவில் தக்கார் பதவி நீக்கம்! - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் பின்னணி என்ன?
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தக்காரை உடனடியாக பதவி நீக்கம் செய்து விட்டு புதிய அறங்காவலர் குழுவை நியமிக்க உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.
முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர். தையில் பூசம், பங்குனியில் உத்திரம், வைகாசியில் விசாகம், தவிர சூரசம்ஹாரம் ஆகியவை இந்த தலத்தின் பிரசித்தி பெற்ற திருவிழாக்கள்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைச் சட்டத்தின் படி அறநிலையத் துறையின் கீழ் வரும் கோவில்களில் அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அது மாற்றியமைக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்ற போது சுமார் 11 ஆண்டுகள் அறங்காவலர் குழுக்களே அமைக்கப்படவில்லை.

அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தூத்துக்குடியைச் சேர்ந்த எழுத்தாளரும் தவெக-வில் சில மாதங்கள் இயங்கியவருமான எஸ்.எம்.ஏ. காந்திமதிநாதன் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் வந்த தீர்ப்பையடுத்து அருள்முருகன் என்பவர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஆனால் பதவிக்காலம் முடிந்தும் அவரே பதவியில் தொடர்ந்து வந்த நிலையில் மீண்டும் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார் காந்திமதிநாதன். அந்த வழக்கில்தான் தற்போது அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. இந்த வழக்கை விசாரித்தது, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி.
இது குறித்து காந்திமதிநாதனிடம் பேசினோம்.

''அறங்காலவர் குழு தலைவர் பதவிக்காலம் முடிஞ்சுடுச்சுன்னா புதிய குழுவை நியமிக்க வேண்டியதுதான் அறநிலையத்துறையின் கடமை. அதைச் செய்யாம தக்கார் பதவியை உருவாக்கி அந்தப் பதவியில் அருள் முருகனைத் தொடரச் செய்தாங்க. இது சட்டப்படி சரியானது இல்லைனுதான் வழக்கு போட்டேன்.
வழக்கு மாண்புமிகு தலைமை நீதிபதி முன் இன்னைக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் தக்கார் பதவியில் நியமிக்கப்பட்டவரை உடனடியாப் பதவி நீக்கம் செய்துவிட்டு நான்கு மாதத்துக்குள் புதிய அறங்காவலர் குழுவை நியமிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.
அறநிலையத்துறை அப்படி நியமிக்கவில்லை என்றால் நீதிமன்றமே தலையிட்டு அறங்காவலர் குழுவை நியமிக்கும்னு அறிவிச்சிருக்காங்க நீதியரசர்'' என்றார் அவர்.