செய்திகள் :

`வெறுப்பு அரசியலை வென்ற ஹாக்கி' - Hi-Fi செய்து கொண்ட இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள்!

post image

துபாயில் கடந்த செப்டம்பரில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது.

லீக், சூப்பர் 4, இறுதிப்போட்டி என இந்தியா - பாகிஸ்தான் மோதிய மூன்று போட்டிகளிலும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்க மறுத்தனர்.

இந்தியா - பாகிஸ்தான் ஆசிய கோப்பை
India VS Pakistan

அதற்கு, பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்திருந்தார்.

இதுமட்டுமல்லாமல், இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற இந்திய வீரர்கள் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வி (PCB தலைவர்) கரங்களால் கோப்பை வாங்க மறுக்கவே, அவரோ கோப்பையை கொண்டுசென்றுவிட்டார். இந்திய அணி கோப்பை இல்லாமலே நாடு திரும்பியது.

அதன் நீட்சியாக, நடப்பு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் லீக் சுற்றில் பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் இந்திய வீராங்கனைகள் கைகுலுக்க மறுத்தனர்.

இவ்வாறு, விளையாட்டிலும் இருநாட்டுக்கிடையிலான அரசியல் புகுத்தப்பட்டிருக்கும் நிலையில், ஹாக்கி போட்டியொன்றில் இருநாட்டு வீரர்களும் ஒருவரையொருவர் High-Five செய்து கொண்ட செயல் வைரலாகி வருகிறது.

மலேசியாவில் நடைபெற்றுவரும் 21 வயத்துக்குட்பட்டோருக்கான சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பை ஹாக்கி தொடரில், ஜோகூர் பாருவில் (Johor Bahru) இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின.

போட்டி ஆரம்பிக்கும்போது இரு அணி வீரர்களும் ஒருவரையொருவர் Hi-Fi செய்து கொண்டனர்.

பின்னர், இரு அணிகளும் ஆட்டநேர முடிவில் தலா 3 கோல் அடிக்கவே போட்டி சமனில் முடிந்தது.

அதைத்தொடர்ந்து, இரு அணி வீரர்களும் களத்தில் Hi-Fi கொடுத்துக் கொண்டனர்.

இருநாட்டு வீரர்களின் இந்த முதிர்ச்சியான செயல், வேண்டுமென்றே இருநாடுகளுக்கிடையே சிலர் பரப்பும் வெறுப்பு அரசியலை வென்றுவிட்டதாக பலரும் நெகிழ்கின்றனர்.