மின் வாரிய அலுவலக பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு: பொறியாளா் கைது
புற்றுநோய்கள் வராமல் தடுக்குமா கொழுப்பு அமிலங்கள்? - ஆய்வு முடிவு சொல்வதென்ன?
ஆரோக்கியமான கொழுப்புகள் என்று அழைக்கப்படும் ஒமேகா 6 மற்றும் ஒமேகா 3 ஆகிய கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ள உணவுகள் மனிதனின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தவிர, இந்த கொழுப்பு அமிலங்கள் இப்போது பல வகையான புற்றுநோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குவதாகவும் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓர் ஆய்வுக்குழு, 2 லட்சத்து 50 ஆயிரம் பேரிடம் கடந்த10 ஆண்டுகளாக ஆய்வு செய்து அதன் முடிவை சில தினங்களுக்கு முன்னால் வெளியிட்டிருக்கிறது. அதாவது, நம் ரத்தத்தில் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட்ஸ், 19 வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கின்றனர்.
ரத்தத்தில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் போதுமான அளவு இருந்தவர்களுக்கு, நுரையீரல் புற்றுநோய், செரிமான அமைப்புச் சார்ந்த வயிறு மற்றும் பெருங்குடலில் வரக்கூடிய புற்றுநோய்களின் சதவிகிதம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ரத்தத்தில் ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட் போதுமான அளவு இருந்தவர்களுக்கு மூளை, தைராய்டு, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, நுரையீரல், கணையம் போன்ற உடல் உறுப்புகளில் வரக்கூடிய புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த இரண்டு கொழுப்புகளும் எந்தெந்த உணவுப்பொருள்களில் இருக்கிறதென்றால், சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி, நெத்திலி போன்ற மீன்களிலும், சியா விதைகள், அக்ரூட் பருப்புகள், ஆளிவிதைகள் போன்றவற்றிலும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. வேர்க்கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், சோயாபீன் எண்ணெய், சோள எண்ணெய் போன்ற தாவர எண்ணெய்களிலும், அக்ரூட், பாதாம், முந்திரி போன்ற கொட்டைகளிலும், மற்றும் சூரியகாந்தி விதையிலும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. இவ்வளவு ஏன், சமீப சில வருடங்களாக பலரும் விரும்பிச் சாப்பிடும் மயோனைஸில்கூட ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறதாம். ஸோ, உங்கள் தட்டில் இந்த உணவுப்பொருள்களுக்கும் அடிக்கடி இடம் கொடுங்கள். புற்றுநோய் வராமல் தடுத்துக்கொள்ளுங்கள்!