புல்லட், மெட்ரோ ரயில்களை காலி செய்துவிடும் ஹைப்பர்லூப் ரயில்! சென்னையில் சோதனை ஓட்டம்
மெட்ரோ ரயில், புல்லட் ரயில்களை எல்லாம் காலி செய்துவிடும் அளவுக்கு உருவாகி வருகிறது ஹைப்பர்லூப் ரயில் சேவை. விரைவில் இது சென்னையில் சோதனை ஓட்டம் நடத்தப்படவிருக்கிறது.
புல்லட் ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 450 கிலோ மீட்டர் என்ற அளவில் இருக்கும் நிலையில், இந்த ஹைப்பர்லூப் ரயிலின் வேகம் மணிக்கு 1,100 கிலோ மீட்டர் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் போக்குவரத்து அமைப்பையே முற்றிலும் மாற்றிவிடும் அளவுக்கு புரட்சியை ஏற்படுத்தும் வல்லமை கொண்டதாக உருவாகியிருக்கிறது ஹைப்பர்லூப் ரயில் சேவை. இதன் சோதனை முயற்சியாக அமைக்கப்பட்டிருக்கும் வழித்தடம் தயாராக உள்ளது.
இது குறித்த செய்தியை ரயில்வே அமைச்சர் விடியோ மூலம் வெளியிட்டுள்ளார். சென்னை -ஐஐடி வளாகத்துக்குள், அதன் மாணவர்கள் உருவாக்கியிருக்கும் 410 மீட்டர் நீளமுள்ள ஹைப்பர்லூப் பாதையில், சோதனை ஓட்டம் நடைபெறவிருப்பதாகவும், இந்த முயற்சிக்கு, இந்திய ரயில்வேயின் நிதியுதவி சென்னை ஐஐடிக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்த ஹைப்பர்லூப் ரயில் சேவையில், ஒரு வெற்றிடக் குழாய் தான் ரயில் பாதையாக இருக்கும். அதற்குள் அதிவேகத்தில் ரயில் பயணிக்கும். இதனால், மிக வேகமாக மற்றும் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படும். இந்த வெற்றிடக் குழாய்க்குள் ரயிலானது மணிக்கு 1,100 கிலோ மீட்டர் வேகத்தில் பயிணிக்கும். அதாவது சென்னை - பெங்களூரு, சென்னை - திருச்சி செல்ல வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் கூட ஆகாது, வெறும் 30 நிமிடங்களில் சென்றுவிடலாம் என்றால் நம்ப முடிகிறதா?
The hyperloop project at @iitmadras; Government-academia collaboration is driving innovation in futuristic transportation. pic.twitter.com/S1r1wirK5o
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) February 24, 2025
ஆம், ஹைப்பர்லூப் பாதையின் சோதனை ஓட்டம் விரைவில் தொடங்கி, வெற்றியடைந்தால், இந்தியாவில் விரைவில் ஹைப்பர்லூப் ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து அமைப்பே புதிய புரட்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.