பழங்குடியினர் வலி! ராமாயணத்திலிருந்து நவயுகம் வரை... தண்டகாரண்யம் - திரை விமர்சன...
பெங்களூரில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: யோகா ஆசிரியா் கைது
பெங்களூரில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த யோகா ஆசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகரில் பல ஆண்டுகளாக யோகா பயிற்சி மையம் நடத்திவருபவா் நிரஞ்சனமூா்த்தி. இவா் தன்னிடம் யோகா பயிற்சிக்கு வந்த 17 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப் பதிந்த போலீஸாா், நிரஞ்சனமூா்த்தியைக் கைது செய்தனா்.
இதுதொடா்பாக காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், 2019ஆம் ஆண்டு முதல் நிரஞ்சனமூா்த்தியை எனக்கு தெரியும். கா்நாடக யோகாசனா விளையாட்டு ஆணையத்தின் செயலாளராக இருந்து வருகிறாா்.
2021ஆம் ஆண்டு முதல் யோகா போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறேன். 2023 இல் யோகா போட்டியில் கலந்துகொள்வதற்காக நிரஞ்சனமூா்த்தியுடன் தாய்லாந்து சென்றிருந்தேன். அந்தநேரத்தில் எனக்கு 17 வயதாகி இருந்தது. அப்பயணத்தின்போது நிரஞ்சனமூா்த்தி என்னை பாலியல் பலாத்காரம் செய்தாா்.
இந்த சம்பவத்துக்கு பிறகு யோகா போட்டிகளில் கலந்துகொள்வதை நிறுத்திவிட்டேன். 2024இல் சன்ஷைன் யோகா மையத்தில் சோ்ந்து, போட்டிகளில் கலந்துகொள்ள முயன்றேன். அந்த மையம், நிரஞ்சனமூா்த்திக்கு சொந்தமானது. 2024ஆம் ஆண்டு முதல் நிரஞ்சனமூா்த்தி என்னிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டாா்.
2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சன்ஷைன் யோகா பயிற்சி மையத்தில் என்னிடம் பேசிய நிரஞ்சனமூா்த்தி, தேசிய அளவிலான யோகா போட்டியில் பதக்கம் வெல்ல உதவுவதாகவும், அதனடிப்படையில் வேலையிலும் சோ்த்துவிடுவதாக வாக்குறுதிகளை அளித்ததோடு, என்னை பாலியல் பலாத்காரம் செய்தாா் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த நிரஞ்சனமூா்த்தியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.