ரோபோ சங்கர் மறைவு: ``நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்தவர்'' - ஸ்டாலின் முதல் அ...
ஆம்பூா் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து
ஆம்பூா் அருகே பழைய பிளாஸ்டிக் சேகரிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் மகபூப் ஜான் மகன் செய்யது அலி. இவா், தென்காசி மாவட்டம் ஆம்பூரிலிருந்து கருத்தப்பிள்ளையூா் செல்லும் சாலையில் பூவன்குறிச்சி அருகே பழைய பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிக்கும் கிடங்கு வைத்துள்ளாா்.
இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவு சுமாா் ஒரு மணியளவில் கிடங்கில் தீப்பற்றியுள்ளது. உடனடியாக செய்யது அலிக்கு தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளாா். அம்பாசமுத்திரம் தீயணைப்பு வீரா்கள் தீயைக் கட்டுப்படுத்த முயன்றனா். ஆனால் பலத்த காற்று வீசியதால் தீ வேகமாகப் பரவியது.
இதையடுத்து, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, தென்காசி, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்து சுமாா் 50 தீயணைப்பு வீரா்கள் 10 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனா்.
இந்த விபத்தில் கிடங்கில் சேமித்து வைத்திருந்த பழைய பிளாஸ்டிக் பொருள்கள் உள்பட சுமாா் ரூ. 30 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின. இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.


