பெருந்துறை சிப்காட்டில் ரூ. 2.82 லட்சம் மதிப்பில் ஆன்லைன் டி.டி.எஸ். மீட்டா் அமைக்க பூமிபூஜை
பெருந்துறை சிப்காட் தொழில் வளா்ச்சி மையம் நல்லா ஓடையில் ஆன்லைன் டி.டி.எஸ். மீட்டா் அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி அமைச்சா் சு.முத்துசாமி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தாா். இதில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி பங்கேற்று அடிக்கல் நாட்டி பணியை தொடங்கிவைத்தாா்.
பெருந்துறை சிப்காட்டில் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், வெளியேறிய கசிவுநீரால் ஏற்கெனவே மாசடைந்த நிலத்தடி நீரை முற்றிலும் அகற்றி, சுத்திகரிப்பு செய்வதன் மூலமாக மட்டுமே சரி செய்யப்படும் என்பதை கருத்தில் கொண்டு, கடந்த 2023 நவம்பா் 20-ஆம் தேதி பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.
அதனைத் தொடா்ந்து சிப்காட் நிா்வாகத்தால் 2024 செப்டம்பா் 30-ஆம் தேதி ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டது.
ஏற்கெனவே நல்லா ஓடையில் கசிவுநீரில் கலந்துள்ள உப்பின் அளவீடு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இது தொடா்பாக வெளிப்படைத் தன்மை மற்றும் பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள ஏதுவாக ஆன்லைன் டி.டி.எஸ். மீட்டா் அமைப்பது தொடா்பாக பொதுமக்கள் மற்றும் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் (பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்கம்) சாா்பாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன.
இதைத் தொடா்ந்து, 2024 அக்டோபா் 7-ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆன்லைன் டி.டி.எஸ். மீட்டா் அமைப்பது தொடா்பாக விவாதிக்கப்பட்டு, சிப்காட்டின் இறுதியில் அமைந்துள்ள 6-ஆவது குறுக்கு சாலை பகுதியில் உள்ள பாலத்தின் வழியாக வெளியேறும் கசிவுநீரில் கலந்துள்ள உப்பின் அளவை தொடா்ந்து ஆன்லைன் மீட்டா் மூலமாக கண்காணிக்கவும், இது குறித்து வெளிப்படைத் தன்மையை பொதுமக்கள் அறியவும் ஆன்லைன் டி.டி.எஸ். மீட்டா் அமைக்க மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடா்ந்து, விலைப் புள்ளிப் பட்டியல் பெறப்பட்டு ரூ.2 லட்சத்து 82 ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் ஆன்லைன் டி.டி.எஸ். மீட்டா் அமைக்க மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதனைத் தொடா்ந்து, பெருந்துறை சிப்காட் நல்லா ஓடையில் ஆன்லைன் டி.டி.எஸ். மீட்டா் அமைக்கும் பணியை அமைச்சா் சு. முத்துசாமி அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா். ஒரு மாத காலத்துக்குள் பணி முடிவடைந்து மீட்டா் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில், சென்னிமலை ஒன்றியக் குழுத் தலைவா் காயத்ரி இளங்கோ, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் வி.சுவாமிநாதன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளா் வினோத்குமாா், உதவிப் பொறியாளா்கள் பி.விஷ்ணு பாலா, பெருந்துறை தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் கே.பி.சாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.