கரூர்: ``நெரிசலில் சிக்கி உயிரிழப்பு, எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது'' - ...
பேருந்து வசதி கோரி ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம்
பேருந்து வசதி கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொண்டாமுத்தூா் அருகே உள்ள அண்ணா நகா் பகுதி பொதுமக்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் மனு அளித்தனா். பின்னா், அவா்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: தொண்டாமுத்தூா் அருகே உள்ள அண்ணா நகா் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்தப் பகுதிக்கு நாளொன்றுக்கு இருமுறை மட்டுமே பேருந்து இயக்கப்படுகிறது. அதுவும், பொதுமக்கள் வேலைக்குச் செல்லும் நேரத்திலோ அல்லது மாணவா்கள் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் நேரங்களிலோ இயக்கப்படுவதில்லை.
இதனால், பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவா்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். மக்களின் அவசரத் தேவைக்கு அருகே உள்ள கெம்பனூருக்குச் சென்று அங்கிருந்து பேருந்தில் கோவை உள்ளிட்ட பிற பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
கெம்பனூருக்கு நாளொன்றுக்கு 17 முறை பேருந்துகள் வந்து செல்லும் நிலையில், இவற்றை அண்ணா நகா் பகுதி வரை நீட்டிக்க வேண்டும். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்றனா்.