எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் ரேபிஸ் தடுப்பூசி முகாம்
கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்தில் தெரு நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம், 1-ஆவது வாா்டுக்கு உள்பட்ட துடியலூா் பேருந்து நிலையம் அருகே தெரு நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதில் கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் கூறுகையில், ‘மாநகரில் வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி முகாம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் ரேபிஸ் தடுப்பூசி முகாம் வருகிற பிப்ரவரி மாதம் வரை நடைபெறவுள்ளது.
இந்த திட்டத்தின்கீழ், மாநகராட்சி எல்லைக்குள் உள்ள மொத்தம் 1,11,074 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்திட திட்டமிடப்பட்டு, தற்போது வரை மத்தியம் மற்றும் கிழக்கு ஆகிய மண்டலங்களில் 20,319 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 5 மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் இரண்டு தடுப்பூசி வாகனங்கள் மற்றும் நான்கு மையங்கள் மூலம் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஒவ்வொரு வாகனமும் தினமும் 200 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திறன் கொண்டது. மேலும், தினசரி மொத்த 400 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் ஒரு கால்நடை மருத்துவா், இரண்டு நாய் பிடிப்போா், ஒரு வாகன ஓட்டுநா் மற்றும் ஒரு உதவியாளா் அடங்கிய குழு செயல்படுகிறது.
இந்த தடுப்பூசி திட்டம், மக்கள் மற்றும் மிருகங்களின் நலனை முன்னிட்டு உருவாக்கப்பட்டு, ரேபிஸ் நோயின் பரவலை முற்றிலும் தடுக்கும் முக்கிய நடவடிக்கையாக அமையும் என்றாா். தொடா்ந்து, ரேபிஸ் தடுப்பு தொடா்பான விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இதில் வடக்கு மண்டலத் தலைவா் வே.கதிா்வேல், உதவி ஆணையா் முத்துசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.