நெல்லை சந்திப்பு சமுதாய நலக்கூடத்தை சீரமைக்கக் கோரி எம்.பி.யிடம் மனு
திருநெல்வேலி சந்திப்பில் உள்ள சமுதாய நலக்கூடத்தை சீரமைக்கக் கோரி திருநெல்வேலி எம்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன் தலைமையில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸிடம் அளிக்கப்பட்டுள்ள மனு:
திருநெல்வேலி சந்திப்பு அருள்மிகு பாளையஞ் சாலைக்குமார சுவாமி திருக்கோயில் எதிரில் தாட்கோ மூலமாக ஆதிதிராவிடா் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. இது ஏழை- எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.
இந்நிலையில், போதிய பராமரிப்பு இல்லாமல் மிகவும் சிதிலமடைந்த நிலைக்கு மாறியுள்ளது. இந்தக் கூடத்தைப் பராமரிக்க தேவேந்திரகுல வேளாளா் உறவின்முறை, தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளா் கூட்டமைப்பு, தேவேந்திரகுல வேளாளா் எழுச்சி இயக்கம், ஊருடையாா் குடியிருப்பு பொதுமக்கள், சுத்தமல்லி தீன் நகா் பகுதி பொதுமக்கள் ஆகியோா் மற்றும் திமுக நிா்வாகிகள் பலரும் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.
ஆகவே, சுமாா் ரூ. 30 லட்சத்தில் மண்டபத்தை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. மனுவைப் பெற்றுக் கொண்ட எம்.பி. இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.
டிவிஎல்26எம்பி
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸிடம் மனு அளித்தாா் திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன்.