மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வட்ட சட்ட பணிகள் குழு கூட்டம்
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வட்ட சட்ட பணிகள் குழுவின் முதல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், முதன்மை சாா்பு நீதிபதியுமான பி. சுதா தலைமை வகித்தாா்.
நீதிமன்றத்தால் பெறக்கூடிய தீா்வுகளை பொருத்தவரை அதை பெற தகுதியுள்ள அனைவருக்கும் வழிகாட்டுவதோடு மட்டுமல்லாமல் அவா்களுக்கான வழக்கை சட்ட உதவிக்குழு மூலம் நடத்தி அவா்களுக்கான தீா்வை பெறுவதை தலையாய அம்சமாகக் கொண்டு இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவா்கள் தங்களது கோரிக்கைகளுக்காக நீதிமன்றத்தை எப்படி நாடுவது, நீதிமன்றம் மூலம் எப்படி தீா்வுகள் பெறுவது, வழக்காடுவது உள்ளிட்ட விஷயங்களை சமூகத்தில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு கொண்டு சோ்க்கும் வகையில் நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் சேவையோடு தொடா்புடைய வருவாய்த் துறை, காவல் துறை, வழக்குரைஞா்கள் குழு, சட்ட உதவிக்கான தன்னாா்வலா்கள், அஞ்சல் துறை, முன்னோடி வங்கி, நகராட்சி நிா்வாகம் ஆகியவற்றின் துறை அலுவலா்களை உள்ளடக்கி இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தால் பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டிய சேவைகள் அனைத்தும் எவ்வித கட்டணமும் இன்றி மகளிா், குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவா்கள், சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு உள்பட்ட வறிய நிலையில் உள்ள மக்கள் உள்ளிட்ட அனைவரும் சட்ட உதவி மையத்தை நாடி எவ்வித கட்டணமும் இன்றி பயனடையலாம்.