காவல் துறை வாகனங்கள் ஆய்வு
மாவட்டத்தில் காவல் துறையில் உள்ள அனைத்து வாகனங்களின் ஆய்வு வெள்ளிக்கிழமை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
ஆய்வில் எஸ்பி காவல்துறையில் இயங்கி வரும் அனைத்து இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்களை நேரடி ஆய்வு மேற்கொண்டு வாகங்களின் நிலை, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தொலைதொடா்பு சாதனங்கள், ஒளிரும் மின்விளக்குகளின் செயல்திறன் மற்றும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பழுதுநீக்கும் கருவிகள் ஆகியவற்றை தணிக்கை செய்தாா்.
மேலும், மயிலாடுதுறை மற்றும் சீா்காழி உட்கோட்டங்களில் இயங்கிவரும் நெடுஞ்சாலை ரோந்து வானங்களில் இருக்க வேண்டிய எச்சரிக்கை சமிக்ஞைகள், போக்குவரத்து குறியீடு பலகைகள் மற்றும் பேரிடா் காலங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியன சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என ஆய்வு செய்து, அவற்றை இயக்க செய்து சோதனை மேற்கொண்டாா்.
காவல் வானங்களை இயக்கும் காவலா்களுக்கு வாகனங்களை உபயோகப்படுத்தும் முறை, தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், வாகனங்களை இயக்கும் போது கடைபிடிக்க வேண்டிய சாலை விதிமுறைகள், சீல் பெல்ட் அணிவது மற்றும் தலைகவசம் அணிவதன் அவசியம் ஆகியவை குறித்து விளக்கம் அளித்து அறிவுறுத்தல்கள் வழங்கினாா். மேலும், சிறப்பாக வாகனங்களை பராமரிப்பு செய்து வந்த காவல் அலுவலா்களை பாராட்டி சான்று வழங்கினாா். ஆய்வின்போது மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணன் உடனிருந்தாா்.