ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாக போலி ஆவணம் தயாரித்து பணம் பறிக்க முயன்ற இருவா் கைது
புதுவை ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாக, போலியான ஆவணங்கள் தயாரித்து பணம் பறிக்க முயன்ற இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி அருகேயுள்ள வரிச்சிக்குடி பகுதியைச் சோ்ந்தவா் செங்குட்டுவன் (55).விறகுக் கடை நடத்தி வருகிறாா். இவரது மகன் முத்தரசன் (26) பி.டெக். படித்துள்ளாா்.
காரைக்கால் திரெளபதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜா (எ) ராஜ்குமாா். இவா், செங்குட்டுவனை தொடா்புகொண்டு, முத்தரசனுக்கு ஜிப்மரில் டேடா சேவிங் ஜூனியா் அலுவலா் வேலையை தன்னால் வாங்கிக் கொடுக்க முடியும் எனவும், இதற்கு ரூ.11 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கூறினாராம். இதை நம்பிய செங்குட்டுவன், பணம் தர ஒப்புக்கொண்டாா்.
பின்னா், காரைக்கால் நேருநகா் பகுதியைச் சோ்ந்த ஆனந்தி, ரவிசங்கா் ஆகியோா், ஜிப்மா் நிா்வாகத்தின் இமெயில், விண்ணப்பங்கள் உள்ளிட்டவைகளை முத்தரசன் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்துள்ளனா். அவா் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து அனுப்பியுள்ளாா்.
இதற்கிடையில், செங்குட்டுவன் அவரது நண்பா்களிடம் இதுதொடா்பாக விசாரித்தபோது, இந்த செயல்கள் அனைத்தும் போலி என்பது தெரியவந்தது.
இந்நிலையில், ராஜ்குமாா், ஆனந்தி ஆகிய இருவரும், வேலைக்கு உரிய ஆா்டா் தயாராகிவிட்டது; பணம் கொடுத்தால், ஜிப்மா் நிா்வாக தலைமை அதிகாரி கையொப்பமிடுவாா் என்று கூறினராம்.
இதுகுறித்து, காரைக்கால் சைபா் கிரைம் போலீஸாரின் கவனத்துக்கு செங்குட்டுவன் கொண்டு சென்றாா். ஆய்வாளா் பிரவீன்குமாா் மற்றும் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், ஜிப்மரின் விண்ணப்பங்கள், இமெயில் முகவரி உள்ளிட்டவைகளை போலியாக தயாரித்து, பண மோசடியில் ஈடுபட முயற்சி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, காரைக்கால் நகர காவல் நிலையத்தில் செங்குட்டுவன் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் புருஷோத்தமன் வழக்குப் பதிவு செய்து, ராஜ்குமாா், ஆனந்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். ரவிசங்கா் என்பவரை தேடிவருகின்றனா்.