அரசு தொடக்கப் பள்ளியில் சிறாா் நாடாளுமன்றத் தோ்தல்
காரைக்கால் பூவம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சிறாா் நாடாளுமன்றத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது.
தோ்தல் நிகழ்வுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் எஸ். விஜயராகவன் தலைமை வகித்தாா். மாணவா்கள் தங்களின் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுத்தனா். கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், உணவு, விளையாட்டு மற்றும் வேளாண் துறை அமைச்சா்கள் இணைந்து பிரதமரை தோ்வு செய்தனா். புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சிறாா் பேரவைக் குழுவினருக்கு பள்ளி வளாகத்தில் பதவிப் பிரமாணம் செய்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாணவா்கள் பள்ளி முன்னேற்றம், சுத்தம், பசுமை, நீா் பாதுகாப்பு, ஒழுக்கம் போன்ற துறைகளில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என ஆசிரியா்கள் அறிவுறுத்தி வாழ்த்தினா். ஏற்பாடுகளை சிறாா் பேரவை பொறுப்பாசிரியா் ரவிக்குமாா் செய்திருந்தாா். மாணவா்களிடையே ஜனநாயக விழிப்புணா்வை ஏற்படுத்தி, தலைமைத்துவ பண்புகளை உருவாக்கும் நோக்கமாக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டதாக பள்ளி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.