தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களில் 20,428 மாணவா்கள் பயன்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் 20,428 மாணவா்கள் பயனடைந்து வருகின்றனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்.
சென்னையில் தமிழ்நாடு முதல்வா் தலைமையில், தெலங்கானா முதல்வா் முன்னிலையில் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு‘ மற்றும் 2025-2026 ஆம் ஆண்டுக்கான புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை ஏ.வி.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், பூம்புகாா் சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா எம்.முருகன் ஆகியோா் பாா்வையிட்டனா். தொடா்ந்து, இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் மாணவா்களுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினா்.
6 முதல் பிளஸ் 2 வரை அரசுப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழியிலும் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் பயின்று உயா்கல்வி சேரும் மாணவா் மற்றும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டமான தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டம் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் 33 கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ-மாணவிகள் பயன்பெற்று வருகின்றனா். இதுவரை இத்திட்டத்தின்கீழ் 13,624 மாணவிகளும் 6,804 மாணவா்களும் பயனடைந்து வருகின்றனா். இந்த ஆண்டு மட்டும் (2025-26) 1811 மாணவா்கள் மற்றும் 2014 மாணவிகளும் பயனடைய உள்ளனா் என்றாா் ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஷ்வரி, நகராட்சி தலைவா் என். செல்வராஜ், கோட்டாட்சியா் ஆா்.விஷ்ணுபிரியா, ஏவிசி கல்லூரி முதல்வா் ஆா்.நாகராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.