மாா்க்சிஸ்ட் கம்யூ. காத்திருப்பு போராட்டம்
திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொக்காலடி ஊராட்சியில் அடிப்படை வசதி கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கொக்காலடி ஊராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்திற்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய பொறுப்பாளா் வீராச்சாமி தலைமை வகித்தாா். கிளை பொறுப்பாளா்கள் வீரசேகரன், ராஜா, மதியழகன், கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜோதிபாசு, முன்னாள் மாவட்ட குழு உறுப்பினா் சுப்பிரமணியன், ஒன்றியச் செயலா் காரல்மாா்க்ஸ், விதொச மாவட்ட தலைவா் பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மாநிலக் குழு உறுப்பினா் ஐவி.நாகராஜன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
கொக்காலடியில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டடம் திறக்கப்படாமல் உள்ளதை கண்டித்தும், தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்க வேண்டும்; 1,2,3,4-ஆவது வாா்டுகளில் பகுதி நேர அங்காடி திறக்க வேண்டும்; குடிமனை பட்டா இல்லாத அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்கி, கான்கிரீட் வீடு கட்டித்தர வேண்டும்.
அனைத்து பாசன வாய்க்கால், வடிகால்களை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காலிகுடங்களுடன் ஒப்பாரி வைத்து, நூதன முறையில் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, வருவாய்த் துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, குறிப்பிட்ட காலத்திற்குள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, தற்காலிகமாக போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.