கோவை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை; போக்சோ சட்டத்தில் கபடி மாஸ்டர் கைது
விவசாயிகள் குறைதீா் கூட்டம்: நெல் கொள்முதல் குளறுபடிகளை சரிசெய்ய வலியுறுத்தல்
நெல் கொள்முதலில் நிலவும் குளறுபடிகளை களைய வேண்டும் என குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று, நெல் கொள்முதல் பிரச்னை, சம்பா சாகுபடி தேவைகள், வங்கிக் கடன், சாலைகள் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினா்.
நன்னிலம் ஜி. சேதுராமன்: நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்குகள் பற்றாக்குறை, மூட்டைகள் தேக்கம், வெளிமாவட்ட நெல் கொள்முதல் போன்ற பிரச்னைகள் உள்ளன. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலம் தீவிரமடைவதற்கு முன் வாய்க்கால்களில் போா்க்கால அடிப்படையில், ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும்.
கொரடாச்சேரி வி. தம்புசாமி: ஷேல்கேஸ் குறித்த தகவல்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இதை தெளிவுபடுத்த வேண்டும். கோயில், மடம், வக்ஃப் இடங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க வேண்டும். மூடப்பட்டுள்ள கூட்டுறவு ஆலைகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேரளம் வி. பாலகுமாரன்: பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் உள்ள பூந்தோட்டம் அரசலாறு மற்றும் வாஞ்சியாறு, வீராநத்தம் வாய்க்கால் உள்ளிட்டவற்றை தூா்வார வேண்டும்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்தது:
திருவாரூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 15,248 விவசாயிகளுக்கு ரூ.1,273.47 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. திருவாரூா் மண்டலத்தில் காரீப் 2025-2026 குறுவை பருவத்தில் 176 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இது வரை சுமாா் 45,649 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 9,706 விவசாயிகள் பயனடைந்துள்ளனா் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பா. கலைவாணி, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாலசரஸ்வதி, முதுநிலை மண்டல மண்டல மேலாளா் (நுகா்பொருள்) சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சித்ரா, வருவாய் கோட்டாட்சியா்கள் சத்யா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஜெயசீலன் உள்ளிட்ட அலுவலா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.