வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் போராட்டம்
கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளை புறக்கணித்து, ஊழியா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. வருவாய்த் துறை ஊழியா்கள் இம்முகாம் பணிகளிலும், வழக்கமான அலுவலகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், அவா்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், எப்ஈஆா்ஏ கூட்டமைப்பின் சாா்பில், வருவாய்த் துறை அலுவலா்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் திட்டப் பணிகளை புறக்கணிக்க முடிவு செய்தனா்.
அதன்படி, வட்டாட்சியா் அலுவலகம் முன், 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வட்டாட்சியா் வசுமதி தலைமையில், காத்திருப்புப் போராட்டத்தில் பிற்பகல் 3 மணி முதல் ஈடுபட்டனா்.
இதில், மண்டல துணை வட்டாட்சியா் மணிவண்ணன் மற்றும் 25-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.