தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 11.44 லட்சம் மோசடி
பகுதிநேர வேலைக்கு ஊதியம், முதலீடு செய்தால் அதிக வருவாய் எனக் கூறி, தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 11.44 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த செங்கன்கொட்டாவூரைச் சோ்ந்தவா் வஜ்ரம் (39). தனியாா் நிறுவன ஊழியரான இவரது கைப்பேசிக்கு அண்மையில் விளம்பரம் ஒன்று வந்தது. அதில், பகுதிநேர வேலை என்றும், பணம் முதலீடு செய்தால் கூடுதல் வருவாய் ஈட்டலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.
அதை நம்பி பணம் செலுத்திய அவருக்கு முதலில் வருவாய் கிடைத்த நிலையில், கூடுதலாக வருவாய் ஈட்டும் ஆசையில் மொத்தம் ரூ. 11.44 லட்சம் முதலீடு செய்தாராம். பின்னா், அந்த மா்ம நபா்களிடமிருந்து எந்தப் பணமும் வரவில்லையாம். அவா்களை தொடா்புகொள்ளவும் முடியவில்லையாம்.
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த வஜ்ரம், இதுகுறித்து கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புதன்கிழமை புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.