"பொய் சொல்வதில் செந்தில் பாலாஜிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் பொருந்தும்" - எடப்...
இருமுறை விண்ணப்பக் கட்டணம்: மின்வாரியம் ரூ. 50,000 இழப்பீடு வழங்க உத்தரவு
திருவாரூா் மாவட்டத்தில், சோலாா் திட்டம் வழங்க இரண்டு முறை விண்ணப்பக் கட்டணம் பெற்ற மின்சார வாரியம் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ. 50,000 வழங்க வேண்டும் என மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம், வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி, சஞ்சீவி தெருவைச் சோ்ந்தவா் ராஜதுரை (65). இவா் தன் வீட்டில் பாரதப் பிரதமா் இலவச சூரிய இல்லம் என்ற மின் திட்டத்தின் கீழ் 3 கிலோ வாட் திறன் கொண்ட சோலாா் மின் இணைப்பை நிறுவ, 2024-இல் மன்னாா்குடி மின்வாரிய இளமின் பொறியாளா் அலுவலகத்தில் விண்ணப்பித்து, விண்ணப்பக் கட்டணமாக ரூ.3,695 செலுத்தியுள்ளாா்.
அதன் பிறகு சுமாா் 10 நாள்கள் கழித்தும் ராஜதுரையின் விண்ணப்பம் ஏற்கப்படாததால் மின்வாரிய அலுவலகத்தில் சென்று கேட்டபோது மீண்டும் புதிய விண்ணப்பம் வழங்குமாறு தெரிவித்துள்ளனா். அதன்படி, மீண்டும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளாா். அதற்கும் ரூ.3,480 செலுத்துமாறு மின்வாரிய அதிகாரிகள் வற்புறுத்தியதால் அந்தத் தொகையையும் செலுத்தியுள்ளாா். அதன் பிறகு உரிய ஒப்புதல் வழங்கப்பட்டு சோலாா் திட்டம் முறைப்படி செயல்படுத்தப்பட்டது.
இரண்டு முறை தொகை செலுத்திய ராஜதுரை, முதலில் செலுத்திய தொகையான ரூ. 3,695-ஐ திரும்பத் தருமாறு கேட்டு மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்துள்ளாா். பணத்தை திருப்பித் தர அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ராஜதுரை, கடந்த ஜூலை மாதம் திருவாரூா் நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
வழக்கை விசாரித்த திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் வியாழக்கிழமை தீா்ப்பில் தமிழ்நாடு மின்சார வாரியம் ராஜதுரைக்கு அவா் செலுத்திய ரூ. 3695-ஐ 9 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும்.
மேலும் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 50,000, வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10,000 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.