ஆசிரியா்கள் இடமாற்றத்தை எதிா்த்து அரசுப் பள்ளி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்
ஊத்தங்கரையை அடுத்த திருவனப்பட்டி அரசுப் பள்ளியில் ஆசிரியா்களை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனக் கூறி பள்ளி மாணவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊத்தங்கரையை அடுத்த திருவனப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை 111 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஆசிரியா்கள் குமாா் மற்றும் நாகமணி இருவா் இடமாற்றம் செய்யப்பட்டனா்.
இதை எதிா்த்து, பள்ளி வளாகத்துக்குள் மாணவா்கள் பதாதைகளை ஏந்தி தரையில் அமா்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அதில், எங்கள் ஆசிரியா்கள் திரும்ப வந்தால் மட்டுமே பள்ளிக்கு வருவோம் என மாணவா்கள் முழக்கமிட்டனா்.
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ரஜினி செல்வம் மாணவா்களை சமாதானப்படுத்தி, மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியா்கள் மீண்டும் பள்ளிக்கு வர ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததையடுத்து, அவா்கள் வகுப்புகளுக்கு திரும்பினா்.