41 ஆண்டுகளுக்குப் பின் இறுதியில் இந்தியாவுடன் மோதல்! - பாக். பயிற்சியாளர் கூறுவத...
கோவை சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி; பதைபதைக்கும் வீடியோ; பின்னணி என்ன?
கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் கோட்டை பாளையம் பகுதியில் கிரேசி ஹேப்பி ஹோம் டிரஸ்ட் என்கிற பெயரில் ஓர் தனியார் காப்பகம் இயங்கி வருகிறது. அங்குப் பெற்றோர் இல்லாத சுமார் 26 குழந்தைகளைப் பராமரிப்பதாகக் கூறப்படுகிறது.

சராசரியாக 6 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகள் காப்பகத்தின் காப்பாளராக உள்ள செல்வராஜ் என்பவர் சிறுவர்களை பெல்டால் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்தச் சம்பவம் குறித்து குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். செல்வராஜால் தாக்கப்பட்ட சிறுவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தினர். காப்பகத்தில் உள்ள மற்ற சிறுவர்கள், பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

செல்வராஜின் மனைவி நிர்மலாதான் காப்பகத்தின் அறங்காவலராக உள்ளார். அவர்கள் இருவரிடமும் காவல்துறை மற்றும் குழந்தைகள் நலத்துறை விசாரணை நடத்தினர். அதில் செல்வராஜ் சிறுவர்களை பெல்டால் தாக்கியது உறுதியானது.
இரண்டு சிறுவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் கோபமடைந்து செல்வராஜ், அவர்களை பெல்டால் தாக்கியது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்புத்துறை சார்பில் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகார் அடிப்படையில் காவல்துறையினர் செல்வராஜ் மற்றும் நிர்மலா மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து செல்வராஜைக் கைது செய்து சிறையில் அடைத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.