`இந்திய மருந்துகளுக்கு 100% வரி' - தொடரும் ட்ரம்பின் வரி வெறி! - யாருக்கு நஷ்டம்?
`இந்தியா மீது அபராதம்' - ட்ரம்ப்
உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்துவது தொடர்பாக தொடர்ந்து பேசிவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தப் போருக்கு முக்கிய காரணம் இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதுதான் என்கிறார்.
அதனால், இந்தியா மீது அபராதம் விதிப்பதாகத் தெரிவித்த அதிபர் ட்ரம்ப், இந்தியப் பொருள்கள் மீது 50 சதவிகிதம் வரை வரி விதித்தார். இந்த வரி கடந்த மாதத்திலிருந்து செயல்பாட்டில் இருக்கிறது.
இந்த நிலையில், அதிபர் ட்ரம்ப் நேற்று, அக்டோபர் 1, 2025 முதல் பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளின் இறக்குமதிக்கு 100 சதவீதம் வரை வரி விதிப்பதாக அறிவித்திருக்கிறார்.

மருந்து தயாரிப்புக்கும் 100% வரி
இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் தன் சமூக ஊடகப் பக்கத்தில், ``அக்டோபர் 1, 2025 முதல், எந்தவொரு பிராண்டட் அல்லது காப்புரிமை பெற்ற மருந்து தயாரிப்புக்கும் 100 சதவீத வரியை விதிக்கப் போகிறோம்.
அமெரிக்காவில் மருந்து நிறுவனத்தின் கட்டுமானம் தொடங்கப்பட்டிருந்தால், இந்த மருந்துப் பொருட்களுக்கு எந்த வரியும் இருக்காது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு முன்னர், `இந்த வரி விதிப்பின் மூலம், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் அதே வேளையில் அரசாங்கத்தின் பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்க வரிகள் உதவும்' எனக் கருத்து தெரிவித்திருந்தார்.
பாதிப்பு யாருக்கு?
மருந்துப் பொருட்களுக்கான இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தை அமெரிக்கா.
2024 நிதியாண்டில், இந்தியாவின் 27.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள மருந்து ஏற்றுமதியில், 31 சதவீதம் அல்லது 8.7 பில்லியன் டாலர் (ரூ.7,72,31 கோடி) அமெரிக்காவிற்குச் சென்றதாக இந்திய மருந்து ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 3.7 பில்லியன் டாலர் (ரூ.32,505 கோடி) மதிப்புள்ள மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

மேலும், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் ஜெனரிக் மருந்துகளில் 45 சதவீதத்திற்கும் அதிகமானவற்றையும், பயோசிமிலர் மருந்துகளில் 15 சதவீதத்திற்கும் அதிகமானவற்றையும் இந்தியாதான் ஏற்றுமதி செய்கிறது.
டாக்டர் ரெட்டீஸ், அரபிந்தோ பார்மா, சைடஸ் லைஃப் சயின்சஸ், சன் பார்மா மற்றும் க்ளாண்ட் பார்மா போன்ற நிறுவனங்கள் அமெரிக்க சந்தையிலிருந்து தங்கள் மொத்த வருவாயில் 30-50 சதவீதத்தை ஈட்டுவதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க நுகர்வோர் இந்தியாவில் தயாரிக்கப்படும் குறைந்த விலை ஜெனரிக் மருந்துகளையே பெரிதும் நம்பியுள்ளனர்.
எனவே, இந்திய மருந்துகள் மீதான அதிக வரிகள், அமெரிக்காவின் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் மருந்து பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் எனக் கருதப்படுகிறது.