முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்துக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!
நன்றியுணர்வின் சக்தி : எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது? | மறந்துபோன பண்புகள் - 5
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
நன்றியுணர்வு - மனநிறைவு மற்றும் மகிழ்ச்சிக்கான திறவுகோல்.
என் வாழ்க்கையில் நான் நினைப்பது எதுவுமே எனக்கு கிடைப்பதில்லை, 'எல்லாரும் எவ்வளவு நல்லா இருக்காங்க நான் மட்டும் தான் இப்படி இருக்கேன்' என்று புலம்பிக் கொண்டு பலபேர் சுற்றித் திரிகிறார்கள். நாம் எப்போதுமே இல்லாத ஒன்றை பற்றி நினைத்து வருத்தப்படுகிறோம், ஆனால் நம்மிடம் இருப்பதை பற்றி நினைத்து பார்த்து சந்தோஷ பட்டதுண்டா?
நம் வாழ்வில் நமக்கு கிடைத்துள்ள அனைத்து நல்ல விஷயங்களையும், அது பெரியதோ அல்லது சிறியதோ அவற்றை அங்கீகரித்து, பாராட்டி, இதயத்தில் இருந்து என்றேனும் நன்றியை உணர்ந்திருக்கிறோமா? இதுவரை இல்லை என்றால் ஒரு ஐந்து நிமிடத்தை அதற்காக செலவிடுங்கள், உங்களுக்குக் கிடைத்துள்ள, நடந்துள்ள நல்லவை அனைத்திற்கும் நன்றி சொல்லுங்கள்.

நன்றியுணர்வை நாம் ஏன் மறந்துவிடுகிறோம்?
நாம் மற்றவர்களை விட அதிக பணம் சம்பாதிக்க வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற பந்தயத்தில் கண்முன் தெரியாமல் ஓடிக் கொண்டிருப்பதால், நம்மிடம் இருப்பதை பற்றி நினைத்து பார்க்க மறந்துவிடுகிறோம். அந்த பந்தயத்தில் இருந்து கொஞ்சம் வெளியே வந்து நில்லுங்கள் ஓர் ஆழமான சுவாசத்தை எடுங்கள், உங்களிடம் என்ன இருக்கிறது? இன்னும் என்ன தேவை என்பதை சிந்தித்த பிறகு உங்கள் பயணத்தை நிதானமாக, சரியாக தொடங்குங்கள். பலரும் இங்கே தேவைக்காக ஓடுவதில்லை, ஆசைக்காக ஓடுகிறார்கள்.
ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், தன் குடும்பத்தோடு வெளிநாடு பயணம் சென்றதை பதிவிடுகிறார். இதை பார்த்த என் நண்பன் ஒருவன் தன் குடும்பத்தோடு வெளிநாடு பயணம் சென்றே தீர வேண்டும் என்று அளவுக்கு மீறி கடன்களை வாங்கிக்கொண்டு பயணம் செய்து வந்தான், இப்போது கடன் கட்ட வேண்டுமே என்று அவன் பொலம்பாத நாள் இல்லை. "நம்ம ஊர்ல இருக்கற எல்லா இடத்தையும் சுத்தி பாத்துட்டயா மச்சானு கேட்டா" அதற்கு அவனிடம் பதிலில்லை.
மற்றொருவர் தான் வாங்கிய விலை உயர்ந்த வீட்டை சுற்றி காட்டுகிறார், அதில் உள்ள பொருட்களை பற்றி அவர் பேசும் போது "ஆஹா இந்த பொருள் நம்ம வீட்ல இருந்தா நல்லா இருக்குமே என்று கேட்கும் பலருக்கும் தோன்றலாம்". மக்கள் தங்களுக்கு தேவையே இல்லாத பொருட்களை வாங்கி குவிக்கலாம்.
கணவனும் மனைவியும் சேர்ந்து பல உணவகங்களுக்கு சென்று உணவுகளை ருசித்து விமர்சனங்களை தெரிவிக்கின்றனர். இதை பார்க்கும் பல குடும்பங்கள் வீட்டில் அதிகம் சமைப்பதே இல்லை.
அதற்காக உங்கள் ஆசைகளை குழிதோண்டி புதைத்து விடுங்கள் அல்லது சமூக வலைதளங்களை பார்க்காதீர்கள் என்று நான் கூற வில்லை, மற்றவருடன் உங்கள் வாழ்க்கையை ஒப்பீடு செய்து கொள்ளாதீர்கள், அவ்வாறு செய்தால் நம்மிடம் இல்லாததை எண்ணி வருத்தம் மட்டும் தான் மிஞ்சும்.
நன்றியுணர்வின் நன்மைகள்:
நன்றியுணர்வு மனநிறைவை தருகிறது, மன அழுத்தத்தை குறைத்து நீங்கள் மகிழ்ச்சியாக வாழ உதவுகிறது. கவலையும், வருத்தமும் குறைவாக இருப்பது, நீங்கள் தெளிவாக சிந்திக்கவும் நல்ல முடிவுகளை எடுக்கவும் உதவும்.
உங்களிடம் இருப்பது உங்களுக்கே போதவில்லை என்ற உணர்வு இருந்தால் பிறருக்கு உதவும் மனம் வராது, நீங்கள் நன்றியுணர்வை கடைபிடிப்பது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அதிகரிக்கும்.
பணம், பொருள் மட்டுமல்ல நல்ல உறவுகளிடம் நீங்கள் கூறும் ஓர் எளிய நன்றி உங்கள் உறவுகளை வலுப்படுத்த உதவும்.

அன்றாட வாழ்வில் நன்றியுணர்வை எவ்வாறு கடைப்பிடிப்பது:
ஒவ்வொரு நாளும் நீங்கள் நன்றியுள்ளவர்களாக உணரும் மூன்று விஷயங்களை பற்றி எழுதுங்கள்.
சின்ன சின்ன விஷயங்களை கூட பாராட்டுங்கள், நீங்கள் பார்க்கின்ற சூரிய உதயம், உங்களுக்கு கிடைக்கின்ற உணவு, ஒரு சிறிய புன்னகை என இதுவரை நீங்கள் கவனிக்காதவற்றை கவனிக்க தொடங்குங்கள். இவை எல்லாம் உங்கள் வாழ்வில் இல்லை என்றால் எவ்வாறு உணர்வீர்கள் என்று சிந்தித்து பாருங்கள்.
ஒரு சவாலை நீங்கள் எதிர்கொள்ளும்போது ஏன் எனக்கு இவ்வாறு நடக்கிறது என்று வருத்தப்படாதீர்கள், நீங்கள் கற்றுக் கொள்வதற்கு அதை ஓவர் வாய்ப்பாக பாருங்கள்.
"கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தஒன்றுநன்று உள்ளக் கெடும்" என்று வள்ளுவர் கூறுவது போல,
குறை கூறுவதை நிறுத்த முயற்சி செய்யுங்கள், எல்லா செயல்களிலும் தவறுகளை மட்டுமே தேடுவதற்கு பதிலாக நன்மைகளை தேடுங்கள்.
"நான் ஆரோக்கியமாக எழுந்ததற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று கூறி நாளைத் தொடங்குங்கள்.
தூங்குவதற்கு முன், அன்று நடந்த ஒரு நல்ல விஷயத்தை நினைவுகூருங்கள்.
நன்றி மறவேல்,
அடுத்த கட்டுரையில் சந்திப்போம்,
நன்றி,
நரேந்திரன் பாலகிருஷ்ணன்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!