சாலையோர வியாபாரி டூ டிஜிட்டல் படைப்பாளர்! - இளைஞரின் உத்வேக கதை #நானும்விகடனும்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
The Plan is ON :-
எனக்கு சிறு வயதில் விகடன் இதழ்களை வாசிக்கும் பழக்கம் இருந்தது. கொரோனா ஊரடங்கு காலங்களில் மீண்டும் இப்பழக்கம் தொற்றிக் கொண்டது. விகடன் இணையதளம் வாயிலாக விகடனின் வெளிவந்த கட்டுரைகளை படித்து நாட்களைக் கழித்தேன். ஒருநாள் எங்கள் ஊர்ப் பொது மக்கள் சேர்ந்து முகநூல் வாயிலாக அபாயகரமான மின் கம்பங்களை மாற்றித் தருமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தார்கள். ஆனால் இப்பெரும் நாட்டில் அந்த குக்கிராமத்தின் குரல்கள் எட்டப்படவில்லை. எனவே சோசியல் மீடியா வளர்ச்சியடையாத அக்காலத்தில் விகடன் மீடியாவின் உதவியை நாடினேன்.
இது குறித்து யாரை அணுகுவது என்று தேடிக்கொண்டிருக்கும் நேரத்தில் விகடனின் 'மை விகடன்' நினைவுக்கு வந்தது. இதன் மூலம் செய்திகளை கட்டுரைகளாக எழுதி அனுப்பியதின் மூலம் எங்கள் ஊரின் குறைகளை தீர்க்க முடிந்தது. அதில் சில முக்கிய பிரச்சினையான குளத்திற்கு நடுவே செல்லும் மின் கம்பியை அகற்றியதை பார்த்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

எங்கள் ஊருக்கு மின் வினியோகம் தொடங்கிய காலத்திலிருந்தே இது குறையாக கருதப்பட்டது. மும்முனை மின்சாரம் வினியோகிக்கப்பட்டு ஏசி போடும் அளவிற்கு தரம் உயர்த்தப்பட்டது குறித்து மக்கள் பாராட்டினார்கள். அந்த நேரத்தில் சென்னையில் ஊரடங்கு உத்தரவுக்கு இடையே 500 மைல்களுக்கு அப்பால் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. அன்று ஊடகத்தின் உண்மைத் திறனை என்னால் உணர முடிந்தது.
'மை விகடன்' தளத்தில் இணைவதற்கு இதற்கு முன்பாக ஒரு கட்டுரை எழுதினேன். அது அன்றாடங்காய்ச்சிகளான எங்களுடைய வாழ்க்கை குறித்து எழுதிய முதல் கட்டுரை.
கொரோனா ஊரடங்கு வேளையில் வேலையின்றி வீட்டில் முடங்கி இருந்தபோது கட்டுரை எழுதும் பழக்கம் தொற்றிக் கொண்டது. செய்திகளில் அன்றாடங்காய்ச்சிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று அதிகமாகப் பரவிக் கொண்டிருந்தது. அப்போது தீர்வு காணப்படாத நேரத்தில், என் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக ஒரு கட்டுரை எழுதி விகடனில் பகிர்ந்தேன்.
விகடன் தரப்பிலிருந்து என்னுடைய அறிமுகத்தை என்னிடம் கேட்டனர். நான் எதுவும் கூறாத நிலையில் , கட்டுரையை வெளியிடும் போது என்னை 'சாலையோர வியாபாரி' என்று குறிப்பிட்டிருந்தனர். அதிலிருந்து சாலையோரத்தை மையமாக வைத்து கட்டுரைகள் மற்றும் இன்ஸ்டாகிராம் வீடியோக்கள் வெளியிட்டு வந்தேன். வியாபார நோக்கமின்றி, என் பார்வையில் தோன்றுவதை(POV) மக்களுக்குப் பகிர்ந்து வந்தேன். அவற்றை சில தலைப்புகளின் கீழ் வெளியிடுவேன். அவை,
சாலையோரக் கடைகள்
பழகுதல் (Socialise)
சாலை பாதுகாப்பு
நெகிழி மாசில்லா சாலைகள்

12 மணி நேர வேலையில், என் தினசரி வாழ்க்கையுடன் இணைத்து சில தகவல்களை பகிர்ந்திருக்கிறேன். சாலையோர மனிதர்கள், பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்க்கையை பதிவிட்டிருக்கிறேன். கடைகளில் புதிதாக வந்திருக்கும் பொருட்கள், புத்தக வாசிப்பு மற்றும் விற்பனைத் திறன் குறித்தும் வெளியிட்டிருக்கிறேன். நான் சென்ற ஊர்களில் பார்த்த சாலையோரக் கடைகளை படம்பிடித்துக் காட்டியிருக்கிறேன். அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகளை வீடியோக்களாக குறிப்பெடுத்துக் கொண்டு, பிறகு தொகுத்து வீடியோவாகவும் கட்டுரைகளாகவும் வெளியிடுவேன்.
நான் பார்த்து வியந்த மனிதர்கள் அன்றாடம் இந்த சாலையில் கடந்து செல்வதைக் காண்பேன். அவர்களுடைய கதைகளை கேட்கும் போது, சிறிய அளவில் தொழில் தொடங்கி முன்னேறியதாக சொல்வார்கள். அவர்களின் வாழ்க்கைப் பயணம் நமக்கு பாடமாக திகழ்கிறது. நம் முயற்சிகளுக்கு உத்வேகமும் நம்பிக்கையும் தருகிறது.
நான் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றேன். அதனை ஊக்கப்படுத்தி பெரும் நகைக்கடை நிறுவனம் எனக்கு காசோலை வழங்கியது. கல்லூரி இரண்டாமாண்டு படிக்கும் போதே காலையில் வகுப்பிற்குச் சென்று மாலை சாலையோரத்தில் வேலை செய்தேன். என் வாழ்க்கையில் பாராட்டு பெற்ற அதே இடத்தின் சாலையோரத்தில் வாழ்க்கை என்னை நிறுத்தியது. இதை நினைத்து ஒருபோதும் நான் சிறுமைப்பட்டதில்லை. ஒருவரின் முன்னேற்றத்திற்கு உதவுவதே கல்வி. அதில் தலைசிறந்தது நம்மைச் சேர்ந்தவர்களையும் சேர்த்து முன்னேற்றுவதாகும். இந்த நோக்கத்திற்காக உருவாக்கப் பட்டது தான், இந்த 'சாலையோரம் (Roadside)'
Search engine :-
இவை அனைத்திற்கும் விதை போட்ட விகடனுக்கு நன்றிகள். நான் பள்ளியில் படிக்கும் சமயத்தில் திறனாய்வுத் தேர்விற்காக வெளியூருக்கு சென்ற போது, ஒரு சாலையோர பெட்டி கடையில் விகடன் வார இதழை வாங்கி படித்தேன்.
இதனை பார்த்த என் பள்ளியின் தமிழாசிரியர் தினமும் மதிய உணவு இடைவேளையில் அவர் படிக்கும் பத்திரிக்கைகளை எனக்கு படிக்கக் கொடுப்பார். அதன் மூலம் என் சக மாணவர்களுடன் அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் அறிவியல் சார்ந்த தகவல்களை படிக்க முடிந்தது. என் பள்ளியின் தமிழாசிரியர் விகடன் போட்ட விதைக்கு தினமும் தண்ணீர் விட்டு வளர்த்தார். பத்திரிக்கைகள் மூலம் கிட்டிய அறிவானது, ஒரு தகவலை கட்டுரையாக எழுதும் ஆற்றலைத் தந்தது.

பிரபல ஹாலிவுட் படங்களில் ஒன்றான Interstellar படத்தில் வரும் நூலகம் போல என் வாழ்விலும் ஒரு நூலகம் இருந்தது. "அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்" மூலம் திறக்கப்பட்ட அந்நூலகம் சிறிது காலம் எங்கள் அறிவுக் கண்களைத் திறந்தது. பள்ளி முடிந்ததும் நூலகத்திற்கு சென்று படிப்போம். இது பள்ளிப் பருவத்தில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் எங்களை காத்த வேலியாக இருந்தது.
தினமும் விதவிதமான புத்தகத்தை படித்துவிட்டு அங்குள்ள வருகைப் பதிவேட்டில் விதவிதமாக கையொப்பமிட்டு வீடு திரும்புவோம். ஒருநாள் வருகை பதிவேட்டில் மாற்றம் ஏற்படுத்தாது நாளுக்குநாள் அறிவை திறந்து புதிய புதிய உலகங்களுக்கு கூட்டிச் செல்லும் புத்தகம் கிடைத்தது. அது விகடன் வெளியிட்ட சுஜாதாவின் ' ஏன்..? எதற்கு..? எப்படி..? ' என்ற புத்தகம்.
இந்த முப்பரிமாண உலகத்தில் time travel செய்ய புத்தகங்களே போதுமானது. உதாரணமாக ஏன் .?எதற்கு..? எப்படி..? என்ற புத்தகத்தின் அமைப்பானது இன்றைய AI உலகின் Chatgpt தொழில்நுட்பத்தை 15 வருடங்களுக்கு முன்பே பார்த்த அனுபவத்தை எனக்கு கொடுத்தது. வாசகர்களின் தேடல்களும் இயந்திரத்தின் தேடல்களும் (search engine) எவ்வாறு பரிணமிக்கின்றன என்பது குறித்த புரிதல் ஏற்படுத்தியது.
ஒரு எழுத்தாளராக சுஜாதா அவர்கள் எழுதிய புத்தகங்களை படித்து விட்டு அவர் திரைக்கதை எழுதிய படங்களை பார்க்கும் போது படம் பார்த்த முழுமையான அனுபவம் கிடைக்கிறது. அவரால் சமகாலத்தில் எழுதப்பட்ட எந்திரன் படமும் எதிர்காலத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் படமாக இருந்ததை உணர முடிந்தது. இதனால் புதிதாக வரும் தொழில் நுட்பங்களின் வருகையைக் கண்டு அஞ்சாமல் அதன் வளர்ச்சியையும் நீட்சியையும் அறிந்து பயன்படுத்த முடிகிறது. வெளிநாடுகளில் இயங்கும் நெகிழி மாசில்லாத மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிய வேலை வாய்ப்பு விளம்பரம் என்னை ஈர்த்தது. வேலை பெற தகுதியாக 500 பார்வையாளர்கள் கொண்ட சமூக வலைதளப் பக்கம் தேவைப்பட்டது. எழுத்து வடிவத்தை ரீல்ஸ் வீடியோக்களாக மாற்றி வெளியிட்டேன். அந்த வேலைக்கான தகுதியான சமூக வலைதளப் பக்கமாக மாற்றினேன்.
தற்போது பல Content creator -களுக்கு மத்தியில் நானும் இன்ஸ்டாகிராமில் நேரலை அம்சங்களை பயன்படுத்தும் அளவிற்கு வளர்ந்ததற்கு விகடனுக்கும் பங்குண்டு. விகடனுக்கு நன்றிகள்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!