Mohan Lal: ``சினிமாதான் என் ஆன்மாவின் இதயத் துடிப்பு'' - விருது பெறும் மேடையில் மோகன் லால்
71-வது தேசிய விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.
தாதா சாகேப் விருது பெறும் மோகன் லால், தேசிய விருது பெறும் ஷாருக்கான், ஜி.வி. பிரகாஷ், ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர், `பார்க்கிங்' பட இயக்குநர் ராம் குமார் என விருது அறிவிக்கப்பட்ட அனைவரும் இந்த நிகழ்வில் பெரு மகிழ்ச்சியோடு கலந்துகொண்டு விருது பெற்றனர்.
தாதா சாகேப் விருது பெற்ற மோகன் லால் இந்த நிகழ்வில் மேடையில் பேசினார்.

மோகன் லால் பேசுகையில், "`தாதா சாகேப் பால்கே' விருது இந்தத் தருணத்தை பெருமையாக உணர்கிறேன். மலையாள சினிமாவின் பிரதிநிதியாக இந்த தேசிய அடையாளத்தை பெறும் இளமையான நடிகர் மற்றும் எங்கள் மாநிலத்திலிருந்து இந்த விருதைப் பெறும் இரண்டாவது நபர் நான்தான். இந்தத் தருணம் எனக்கானது மட்டுமல்ல, இது ஒட்டுமொத்த மலையாள திரை சமூகத்திற்கானது.
இந்த விருதை நான் மலையாள சினிமாவுக்கு செலுத்தும் ட்ரிப்யூட்டாகப் பெற்றுக்கொள்கிறேன். இந்த விருது குறித்தான அறிவிப்பு வந்த சமயத்தில் நான் மகிழ்ந்தேன்.
அந்த மகிழ்ச்சி, இதைப் பெற்றுவிட்டோம் என்ற பெருமையினால் அல்ல. எங்களுடைய சினிமா பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதை எண்ணி மகிழ்ந்தேன்.
நான் இந்த விதியை ஒரு மென்மையான கையாக நம்புகிறேன். அதுதான் மலையாள சினிமாவை வடிவமைத்த அனைவரின் சார்பாக இந்த விருதை என்னை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கிறது.
இந்தத் தருணத்திற்கு நான் ஒருபோதும் கனவு கண்டதில்லை. எனவே, இது கனவு நனவாகிய தருணம் கிடையாது.

இது அதைவிட மிகப் பெரிய மற்றும் ரகசியமான ஒன்று. இது என்னை மேலும் ஆழமாக பொறுப்புணர்வோடு செயல்படச் சொல்கிறது.
இந்த விருதை என் முன்னோடிகளின் ஆசிர்வாதமாக ஏற்றுக்கொள்கிறேன். இதை மலையாள திரைப்படத் துறையின் துடிப்பான உலகிற்கு அர்ப்பணிக்கிறேன்.
ஒரு நடிகராகவும், திரைப்பட ஆளுமையாகவும், இந்த கௌரவம் என்னை வலுப்படுத்துகிறது.
இது சினிமாவில் என் பற்றுதலை மேலும் ஆழப்படுத்துகிறது." என்றவர் மலையாளத்தில், "என்டைய ஆத்மாவிந்தே ஸ்பந்தனமான சினிமா (சினிமாதான் என்னுடைய ஆன்மாவின் இதயத் துடிப்பு)." என்று பேசி முடித்தார்.