அதிபர் டிரம்ப்புடன் பாக். பிரதமர், ராணுவத் தலைமைத் தளபதி சந்திப்பு!
Ind vs Pak Final: 41 வருடத்தில் முதல்முறை; மீண்டு(ம்) வந்த பாக்., இந்தியா பிளான் என்ன; வெல்வது யார்?
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் 17-வது ஆசிய கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது.
லீக் சுற்று முடிவில் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நான்கு அணிகளில் இந்தியா தனது முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் தனது இடத்தை உறுதி செய்தது.
இச்சுற்றில் தனது கடைசி ஆட்டத்தை இலங்கையுடன் இன்று (செப்டம்பர் 26) மோதுகிறது.

மறுபக்கம், இச்சுற்றில் தனது முதல் போட்டியில் இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது போட்டியில் இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பில் நீடித்தது.
அதேபோல், முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்திய வங்காளதேச அணி, இரண்டாவது போட்டியில் இந்தியாவிடம் தோற்றாலும் இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பில் நீடித்தது.

இந்த இரு அணிகளிடமும் தோற்ற இலங்கை அணி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை முற்றிலுமாக இழக்க, இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது நீயா நானா என்ற போட்டியில் பாகிஸ்தானும் வங்காளதேசமும் நேற்று (செப்டம்பர் 25) மோதின.
இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்து 135 ரன்கள் மட்டுமே அடித்த பாகிஸ்தான் அணி, பவுலிங்கில் சிறப்பாகச் செயல்பட்டு வங்காளதேசத்தை 124 ரன்களுக்குச் சுருட்டி வெற்றியுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
பலமுறை ஃபைனல்ஸ்ல மோதியிருக்கு, ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம்!
கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே பரம எதிரிகளுக்குள்ளான போட்டி என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
இருநாட்டு வீரர்களும், ரசிகர்களும் பெரும்பாலானோர் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவும் ஆரம்பித்தனர்.
பிஸினஸுக்காக விளையாட்டைத் தாண்டி இருநாட்டுக்கிடையிலான அரசியல் மோதலை இதற்குள் கொண்டுவந்ததுதான் இதற்கு முக்கிய காரணம்.

இருநாட்டுக்கிடையிலான அரசியல் மோதல் காரணமாக 2012-க்குப் பிறகு இரு நாடுகளும் தங்களுக்குள் இருதரப்பு தொடரில் ஆடவில்லை.
அது தெரிந்தோ தெரியாமலோ இந்தியா பாகிஸ்தான் போட்டியைச் சுற்றியிருக்கும் பிஸினஸுக்கு சாதகமாக அமைந்தது.
பாகிஸ்தான் இந்தியாவுக்கு வந்து ஆடிய அந்த கடைசி சுற்றுப்பயணத்தில் டி20 தொடர் சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரைப் பாகிஸ்தான் வென்றது.
5 ஃபைனல்ஸ் - பாகிஸ்தான் 3, இந்தியா 2!
அதற்கு முன்புவரை இரு அணிகளும், பென்சன் & ஹெட்ஜெஸ் உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப் (1985), ஆஸ்திரேலிய - ஆசிய கோப்பை (1986, 1994), டி20 உலகக் கோப்பை (2007) என நான்கு முறை இறுதிப் போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதியிருக்கின்றன.
அதில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலா இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கின்றன.
2012 இருதரப்பு தொடருக்குப் பிறகு, இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய சாம்பியன்ஸ் டிராபி (2017) இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது.

அதற்குப் பிறகு எந்தவொரு தொடரிலும் இரு அணிகளும் நேருக்கு நேர் இறுதிப் போட்டியில் மோதவில்லை. இவையெல்லாம் ஒருபுறமிருக்க, ஆசிய கோப்பை வரலாறே தனி.
1984 முதல் நடைபெற்று வரும் இந்த ஆசிய கோப்பை தொடரில், இந்தியா 8 முறையும், இலங்கை 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் கோப்பை வென்றிருக்கிறது.
41 ஆண்டுகளாக இது நடைபெற்று வந்தாலும் இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருமுறைகூட நேருக்கு நேர் இறுதிப் போட்டியில் மோதியதில்லை, இதுதான் முதல்முறை.
மீண்டு(ம்) வந்த பாகிஸ்தான் பதிலடி கொடுக்குமா? அல்லது இந்தியாவின் வெற்றி தொடருமா?
நடப்பு ஆசிய கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம்பெறக்கூடாது என்ற எதிர்ப்புகள் அரசியல் மட்டத்தில் எழுந்தன.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட மோதல்தான் அந்த எதிர்ப்புகளுக்கு முக்கிய காரணம்.
ஆனாலும், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம்பெறச் செய்யப்பட்டன.

லீக் சுற்றில் இரு அணிகளும் மோதின. அப்போட்டியில் பாகிஸ்தானின் மிக மோசமான ஆட்டம் முதல் பாதியிலேயே அவர்களின் தோல்வியைக் காட்டிவிட்டது.
ஆனால், அப்போட்டியில் வெற்றிபெற்ற பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்காமல் செல்லாமல் புறக்கணித்ததும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் "பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்கிறோம் என்பதை வெளிப்படுத்தினோம்" என்று அரசியலைக் கொண்டு வந்ததும் பெரும் விவாதப் பொருளைக் கிளப்பியது.
அடுத்து சூப்பர் 4 சுற்றில் இரு அணிகளும் மீண்டும் மோதும் சூழல் உருவானது.
லீக் போட்டியை விட சற்று சிறப்பான ஆட்டத்தைப் பாகிஸ்தான் வெளிப்படுத்தியிருந்தாலும் இந்தியாவை வீழ்த்த அவர்களுக்கு அது போதவில்லை.
வெற்றிபெற்ற இந்திய வீரர்கள் மீண்டும் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்காமல் சென்றனர். இது மீண்டும் விவாதப்பொருளானது.
கூடவே, போட்டியின்போது ஃபர்ஹான், ஹாரிஸ் ராஃப் ஆகியோர் செய்த சைகைகளும் சர்ச்சையாக்கப்பட்டன. வழக்கம்போல ஐ.சி.சி அமைதியாக வேடிக்கை பார்த்தது.

Rivalry or not... who will win Asia Cup?
இன்னொரு பக்கம், இந்தியா பாகிஸ்தான் போட்டி இனி ரைவல்ரி அல்ல என்று சூர்யகுமார் வெளிப்படையாகப் பேசினார்.
ஆனால், இந்தியாவுடனான தோல்விக்குப் பிறகு இலங்கை மற்றும் வங்காளதேசத்தை வீழ்த்தி மீண்டும் இந்தியாவை எதிர்கொள்ளும் வகையில் ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறது பாகிஸ்தான்.
எனவே, இறுதிப்போட்டியிலும் இந்தியாவின் வெற்றி தொடருமா, இந்திய வீரர்கள் மீண்டும் கைகுலுக்காமல் செல்வார்களா அல்லது லீக் மற்றும் சூப்பர் 4 சுற்று தோல்விகளுக்கு வெற்றியின் மூலம் பாகிஸ்தான் பதிலடி கொடுக்குமா? அப்படியே வெற்றிபெற்றாலும் இந்திய வீரர்களைப் போல கைகுலுக்காமல் செல்வார்களா அல்லது கைகுலுக்குவார்களா என்பதை செப்டம்பர் 28-ம் தேதி இரவு இறுதிப் போட்டியில் பார்க்கலாம்.