Sonam Wangchuk: தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சோனம் வாங்சுக் கைது; தலைவர்கள...
``படிப்புக்காக நான் 3 நாள் சாப்பிடாமல் இருந்தேன்'' - முதல்வரிடம் பேனா வாங்கிய சுபலட்சுமி பேட்டி
தமிழக அரசு சார்பில் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சி நேற்று (செப்.25) சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
தமிழக அரசு கல்விக்காகச் செயல்படுத்தி வரும் திட்டங்களான ‘காலை உணவுத்திட்டம்’, ‘தமிழ்ப் புதல்வன் திட்டம்’, ‘புதுமைப் பெண் திட்டம்’ உள்ளிட்ட 7 திட்டங்கள் பற்றிய சாதனைகளை விளக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் 2025-2026ஆம் கல்வி ஆண்டிற்கான தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டங்களையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இருவரும் இணைந்து தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் புதுமைப்பெண் திட்டத்தில் பலன் அடைந்து வரும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்ற மாணவி மேடையில் பேசியபோது, 'தாம் எதிர்காலத்தில் கணித ஆசிரியராக வருவேன்’ எனத் தெரிவித்தார்.
அதைக் கேட்ட முதலமைச்சர் அவரை அழைத்துத் தன்னுடைய பேனாவை அவருக்குப் பரிசாக அளித்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
எப்படியாவது படித்துவிட வேண்டும் என்று குறிக்கோளைக் கொண்ட சுப்புலட்சுமிக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சுபலட்சுமியைத் தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய சுபலட்சுமி,
"நான் +2 முடித்த பிறகு, படிக்க வேண்டும் எனச் சொல்லி வீட்டில் கேட்டேன். ஆனால், பெண்கள் எல்லாம் எதற்குப் படிக்க வேண்டும்? படிக்க எல்லாம் கூடாது எனச் சொல்லிவிட்டார்கள்.
படித்தே தீர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நான் 3 நாட்கள் சாப்பிடாமல் இருந்தேன். பிறகு தினக்கூலி வேலைக்குச் சென்றேன். அந்தக் காசை வைத்துத்தான் அப்ளிகேஷன் போட்டேன்.
எனக்குச் சீட்டும் கிடைத்தது. நான் கல்லூரியில் சேர்ந்தபோதும் என்னால் கல்லூரி கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் மூலம் புதுமைப்பெண் திட்டம் குறித்துத் தெரியவந்தது. பின் அதற்கு விண்ணப்பித்தேன்.

அதில் வரும் காசை வைத்துதான் எனது படிப்பு செலவுகளைப் பார்த்துக் கொள்கிறேன். புதுமைப்பெண் திட்டத்தில் பணம் வருவதால் இப்போது நான் வேலைக்குச் செல்வதில்லை. படிப்பில் கவனம் செலுத்திப் படித்து வருகிறேன். எனக்கு இந்தத் திட்டம் மிகவும் உதவியாக இருக்கிறது.
இந்நிலையில்தான் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சிக்கு புதுமைப்பெண் திட்டத்தைப் பற்றிப் பேசச் சென்றிருந்தேன். அப்போது மேடையில் வைத்து, என்னுடைய மிகப்பெரிய ஆசையே கணித ஆசிரியர் ஆவதுதான் என்று சொன்னேன்.
அதனைக் கேட்ட ஸ்டாலின் சார் என்னைக் கூப்பிட்டுப் பேனாவைக் கொடுத்தார். அவர் அந்தப் பேனாவைக் கொடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. உன்னுடைய கனவு நிறைவேறட்டும் என்றும் சொன்னார். ரொம்பச் சந்தோஷமாக இருந்தது.

அதேபோல உதயநிதி சாரும் வாழ்த்துகள் என்று சொன்னார். பிறகு மேடையில் நீங்கள் பேசியதைக் கேட்கும்போது கஷ்டமாக இருந்தது என்று சிவகார்த்திகேயன் சார் சொன்னார்” என சுபலட்சுமி நம்மிடம் பகிர்ந்தார்.
தொடர்ந்து கோரிக்கை ஒன்றை அவர் முன்வைத்தார். அதாவது இப்போது யுஜி(இளங்கலை)படிப்பிற்கு மட்டுமே புதுமைப் பெண் திட்டம் வழங்கப்படுகிறது.
பிஜி(முதுகலை) படிப்பவர்களுக்கும் புதுமைப் பெண் திட்டம் வழங்கினால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்” என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.