அதிகம் அழுத்தம் எடுத்துக்கொள்ளப் போவதில்லை; உலகக் கோப்பை குறித்து ஹர்மன்பீரித் க...
அதிபர் டிரம்ப்புடன் பாக். பிரதமர், ராணுவத் தலைமைத் தளபதி சந்திப்பு!
பாகிஸ்தானின் பிரதமர் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி ஆகியோர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்குச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நியூயார்க்கில் இருந்து வாஷிங்டன் சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை நேற்று (செப். 25) வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்து உரையாடினர்.
இந்தச் சந்திப்பில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் போர்நிறுத்தம் கொண்டு வருவதற்கு அதிபர் டிரம்ப் உதவியதாகக் கூறிய பிரதமர் ஷரீஃப், அவரை அமைதிக்கான மனிதர் எனக் குறிப்பிட்டு புகழாரம் சூட்டினார். மேலும், இருநாடுகளின் தலைவர்களும் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது.
கடந்த 6 ஆண்டுகளில், அமெரிக்க அதிபரை வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் சந்தித்துள்ளது இதுவே முதல்முறை ஆகும். இறுதியாக, 2019 ஆம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை நேரில் சந்தித்தார்.
அதன்பின்னர், அதிபர் ஜோ பைடன் பதவிக்காலத்தில் பாகிஸ்தானுடனான உறவுகளை, அமெரிக்க அரசு முற்றிலும் புறக்கணித்து வந்தது. ஆனால், ஜனவரி மாதம் மீண்டும் அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், பாகிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: டிரம்ப்புக்கு நோபல் பரிசு இல்லையா? ஏன்?