கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; பாக். வீரர்களுக்கு பயிற்சியாளர் அறிவுரை!
பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் அறிவுரை வழங்கியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இன்று (செப்டம்பர் 26) விளையாடுகின்றன. துபையில் நாளை மறுநாள் (செப்டம்பர் 28) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளன.
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றில் ஒரு முறையும், சூப்பர் 4 சுற்றில் ஒரு முறையும் மோதிக் கொண்டன. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றது. இந்த சூழலில், இரண்டு அணிகளும் மீண்டும் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் சந்திக்கவுள்ளன. மேலும், 41 ஆண்டுகால ஆசிய கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இரண்டு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதவுள்ளதால், இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
முதல் முறையாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் மோதவுள்ளதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தாலும், இரண்டு அணிகளுக்கும் இடையேயான சர்ச்சைகளும் இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்பதே பாகிஸ்தான் வீரர்களுக்கு என்னுடைய அறிவுரையாக இருக்கும். அதற்காகவே, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறோம். வெளியில் நடக்கும் விஷயங்கள் குறித்து என்னைக் காட்டிலும் ஊடக நண்பர்கள் உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். கிரிக்கெட் தொடர்பான விஷயங்களை மட்டுமே நான் கவனித்து வருகிறேன். எங்களது இலக்கு இறுதிப்போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதே என்றார்.
Pakistan head coach Mike Hesson has advised the team's players to focus only on cricket.
இதையும் படிக்க: ஷகிப் அல் ஹசனின் சாதனையை முறியடித்த முஸ்தஃபிசூர் ரஹ்மான்!