தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
Ind vs Ban: வங்கதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா
இந்தாண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 வடிவில் நடைபெற்று வருகிறது.
ஏ, பி என இரண்டு குழுக்களாக 8 அணிகள் இத்தொடரில் பங்கேற்றன. லீக் சுற்று முடிவில் இரு குழுக்களில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருந்த இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.
இந்தச் சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.
ஆனால், சூப்பர் 4 சுற்றில் தலா மூன்று போட்டிகளில் ஆடும் இந்த நான்கு அணிகள் குறைந்தபட்சம் 2 போட்டிகளில் வென்றால்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.

இந்த சூப்பர் 4 சுற்றுப் பகுதியின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடியிருந்த இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.
இதையடுத்து இன்று இந்தியா, வங்கதேசம் இடையே போட்டிகள் நடைபெற்றன.
இதில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது இந்திய அணி.
டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்திருந்தது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.
அபிஷாக் ஷர்மா அதிரடியாக 37 பந்துகளுக்கு 75 ரன்களை விளாசியிருந்தார். ஹர்த்திக் நிதானமாக விளையாடி 29 பந்துகளுக்கு 38 ரன்களை எடுத்திருந்தார்.

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, இந்திய பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் திணறியது.
குல்தீப் 3 விக்கெட், வருண், பும்ரா தலா 2 விக்கெட்கள் என வரிசையாக வீழ்த்த 19.3 ஓவர்களில் வங்கதேச அணி மொத்தமாக சுருண்டது.
அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 127 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியைத் தழுவியது.
இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
நாளை பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும்.