``நான் சனிக்கிழமை மட்டுமே வெளியே வருபவன் அல்ல'' - விஜய்யைத் தாக்கிப் பேசிய உதயநிதி ஸ்டாலின்
2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணப் பிரசாரத்தை வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கி, வாரந்தோறும் சனிக்கிழமை ஒவ்வொரு மாவட்டமாகப் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்திற்கான திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாளை 27-ஆம் தேதி காலையில் நாமக்கல்லிலும் பின்னர் கரூரிலும் பிரசாரம் செய்ய உள்ளார்.
இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை குறித்தும் விஜய்யின் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் குறித்து விமர்சித்தும் பேசியிருக்கிறார்.
மகளிர் உரிமைத் தொகை
இதுகுறித்துப் பேசியிருக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2023ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து இந்த செப்டம்பர் மாதம் வரை 1 கோடியே 20 லட்சம் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதுவரை ஒரு நபருக்கு 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.
நான் வெறும் சனிக்கிழமை, சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் கிடையாது.
நான் பல மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் போவேன், வாரத்தில் 4, 5 நாட்கள் வெவ்வேறு மாவட்டங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்துக்கொண்டுதான் இருப்பேன். நான் வெறும் சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் கிடையாது.

அப்படி நான் அடிக்கடி மக்களைச் சந்திக்கும்போதெல்லாம் மகளிர் என்னிடம், 'மருத்துவச் செலவுகள், குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் வாங்குவது, அவசரத் தேவைகள் என மகளிருக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறுவார்கள்.
நான் போகிற இடமெல்லாம் இந்தத் திட்டத்தைப் பாராட்டி முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொல்கிறார்கள். சிலருக்கு வரவில்லை என்றும் கூறுவார்கள்.
சில விதிகளைத் தளர்த்தி தகுதியான இன்னும் பல மகளிருக்கு இந்த மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்
10,000 கோடி நிதி தர மறுத்தாலும் மும்மொழியை ஏற்கமாட்டோம்
புதுசா ஜிஎஸ்டியைக் குறைத்ததாக ஒரு நாடகத்தை ஒன்றிய பாஜக அரசு நடத்துகிறது. ஜிஎஸ்டியை ஏற்றினதே அவர்கள்தான்.
கடந்த 8 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 55 லட்சம் கோடியை ஜிஎஸ்டியாக தமிழ்நாட்டு மக்கள் ஒன்றிய அரசுக்குக் கட்டியிருக்கிறார்கள். அதை திருப்பிக் கொடுத்தீர்களா?

கல்விக்குத் தர வேண்டிய நிதியே இன்னும் வரவில்லை. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் தருவேன் என்கிறார்கள்.
அது ஒருபோதும் முடியாது. 10,000 கோடி நிதி தர மறுத்தாலும் மும்மொழியை, புதிய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம் என்று பேசியிருக்கிறார்.