2026 தேர்தல் விஜய்க்கு அரசியல், தேர்தல் என்ன என்பதை புரிய வைக்கும்: எஸ்.வி.சேகர்
கல்வராயன் மலை: கோழியை நோக்கிச் சீறிய துப்பாக்கி குண்டு - இளைஞரின் உயிரைக் காவு வாங்கியது எப்படி?
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது கல்வராயன் மலை. இங்கு 50 வருவாய் கிராமங்களும், 170-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களும் இருக்கின்றன. இந்த கிராமங்களைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாகவும், விலங்குகளை வேட்டையாடுவதற்கும் கள்ளத் துப்பாக்கிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
அப்படி விலங்குகள் வேட்டைக்காக சுடப்படும் துப்பாக்கிக் குண்டுகள், அவ்வப்போது மனித உயிர்களையும் காவு வாங்கி விடுகின்றன. அதையடுத்து போலீஸார் அந்தப் பகுதிகளில் ஆய்வு செய்து, கள்ளத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்வார்கள்.
ஆனாலும் கல்வராயன் மலையில் நடைபெறும் கள்ளத்துப்பாக்கி கலாசாரத்தை போலீஸாரால் முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படியான சூழலில்தான் தற்போது மேலும் ஒரு சோக சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

கல்வராயன் மலை மேல் மதூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர், வீட்டுக்கு வந்த தன்னுடைய மருமகனுக்கு கோழிக் கறி விருந்து வைக்க முடிவெடுத்தார்.
அதற்காக தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால், வீட்டின் பின் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த கோழியைக் குறிவைத்து சுட்டிருக்கிறார். ஆனால் குறி தவறிய அந்த துப்பாக்கிக் குண்டு, பக்கத்தில் வீட்டில் இருந்த பிரகாஷ் என்பவரின் தலையைத் துளைத்தது.
அதனால் அதே இடத்தில் சுருண்டு விழுந்த பிரகாஷ், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்திருக்கும் கரியாலூர் போலீஸார், அண்ணாமலையை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.