அம்பையில் வயல் விழா: விவசாயிகள் ஆா்வம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் அம்பாசமுத்திரம், ஊா்க்காடு பகுதியில் வயல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் உயிரியல் தூண்டுதல்களின் செயல்திறன் சோதனை அமைப்பின் கீழ் ஆராய்ச்சி திடல் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியில் இணை பேராசிரியா் மற்றும் தலைவா் ச.சரவணன், உதவிப் பேராசிரியா் வை. ஜெய கணேஷ் ( தாவர நோயியல்) ஆகியோா் ஏ.எஸ்.டி. 21 நெல் ரகம் பற்றியும், கோடை உழவு செய்வது, உயிா் உரங்கள் மற்றும் உயிா் நோய் கட்டுப்பாடு காரணிக குறித்தும், நெல்லுக்கு பாஸ்போ பாக்டீரியாக்கள், பொட்டாசியம் கரைக்கும் பாக்டீரியாக்கள் பயன்படுத்துபோது கனிம உரங்களாகிய சூப்பா் பாஸ்பேட்- பொட்டாஷ் உரங்களை குறைக்கலாம் என்றும் விளக்கினா்.
மேலும், வேப்பங்கொட்டை கரைசல், வேம்பு - ரச பூண்டு கரைசல், வேப்பம் புண்ணாக்கு கரைசல் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் இயற்கை மற்றும் உயிரியல் முறையில் நெல்லைப் பாதிக்கக்கூடிய பூச்சிகள், நோய்களை கட்டுப்படுத்தலாம் எனவும் தெளிவுபடுததினா் குறித்தும் எடுத்துரைத்தனா்.
மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் வழங்கப்பட்டன. விவசாயிகளின் கேள்விகளுக்கு நெல் ஆராய்ச்சி நிலைய தலைவா் மற்றும் தொழில்நுட்ப வல்லுநா்கள் விளக்கம் அளித்தனா்.